செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் ரூ.12,292 கோடி முறைகேடு


நாடு முழுதும் செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், அதன் உரிமையாளர்களின் வீடு மற்றும் அவர்களின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனைகளில் அந் நிறுவனங்கள் 12 ஆயிரத்து 292 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகளைச் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த டிச.21 முதல், நாடு முழுதும் செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், அதன் உரிமையாளர்களின் வீடு மற்றும் அவர்களின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றது.

குறிப்பாக கர்நாடகா, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, பிஹார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது.

சோதனையில் ஷியோமி, ஓப்போ ஆகிய இரு பெரிய நிறுவனங்கள், வெளிநாட்டில் உள்ள தங்கள் குழும நிறுவனங்களுக்கு ராயல்டி அடிப்படையில் ரூ.5,500 கோடிக்கு மேல், முறையான ஆவணங்கள் இல்லாமல் பணத்தை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனங்கள் செல்போன் உதிரி பாகங்களை வாங்கி செல்போன் தயாரிப்பதாகக் கூறிக்கொண்டு, அதற்குண்டான வருமானவரி சட்டத்தை முறையாகப் பின்பற்றாமலும், சரியான வரியை செலுத்தாமலும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அதேபோல், இந்தியாவில் உள்ள அதன் குழும நிறுவனங்களுக்கு 5,000 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை கடனாகப் பெற்று, அதற்குண்டான உரிய ஆவணங்களை பராமரிக்காமல் இருந்து வந்ததும் சோதனையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இந்தியாவிலுள்ள அதன் தொடர்புடைய குழும நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் மற்றும் அதற்கான வட்டி தொகைக்கு, முறையான வரி செலுத்தாமல் சுமார் 1,400 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டதும், இந்தியாவைச் சேர்ந்த நிறுவனமும் சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு, டிடிஎஸ் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் பெயரளவில் மட்டும் நிறுவனங்களை தொடங்கி அதன் இயக்குநர்களாக இந்தியர்களை பணியமர்த்தி, ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் வெளிநாட்டிலிருந்தே ஷியோமி, ஓப்போ நிறுவனங்கள் இயக்கி வருவதாகவும், இதுபோன்ற நிறுவனங்களை உருவாக்கி சுமார் ரூ.42 கோடி அளவுக்கு இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு முறையான வரி செலுத்தாமல், உதிரிபாகங்களை அனுப்பியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 30 இடங்களில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையில், தங்களுக்கு தொடர்பே இல்லாத மென்பொருள் போன்ற நிறுவனங்களுக்கு சுமார் 50 கோடி ரூபாய் அளவுக்கு நிதி அனுப்பியது போல் பொய் கணக்கு காட்டியதும், இந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பு, பொய் கணக்குகள், முறையற்ற பணப்பரிவர்த்தனை மூலமாக ரூ.12,292 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக வருமானவரித் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தேவைப்பட்டால் மீண்டும் இது தொடர்பாக சோதனைகள் தொடரப்படும் எனவும் வருமானவரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x