கர்நாடகா: உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை பின்னுக்குத் தள்ளிய காங்கிரஸ்!


பசவராஜ் பொம்மை, சித்தராமையா

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜகவை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றி இருப்பது பாஜக வட்டாரத்தை கலக்கமடைய வைத்திருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் 58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 57 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 9 வார்டுகளுக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இடையில் பெருவாரியான இடங்களில் பலமான போட்டி நிலவியது. இருப்பினும், ஆளும்கட்சியான பாஜக அதிகமான இடங்களை வெல்லும் என்ற கணிப்பு இருந்தது. ஆனால், ஆளும்கட்சியின் அதிகார பலத்தை எல்லாம் முறியடித்து அதிகமான இடங்களை காங்கிரஸ் பிடித்திருப்பது பாஜக வட்டாரத்தை கலக்கமடையச் செய்திருக்கிறது.

மொத்தம் 1,187 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 500-க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது. இரண்டாவது இடத்தில் பாஜக 434 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. முன்னாள் முதல்வர் குமரசாமியின் மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்தத் தொகுதியான சிக்காவியிலேயே காங்கிரஸ் கட்சி 14 வார்டுகளைக் கைப்பற்றியிருப்பது காங்கிரஸே எதிர்பார்க்காத திருப்பம் என்று சொல்லப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, ”பாஜகவை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் கட்சி 500 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் பல இடங்களில் காங்கிரஸும் பாஜகவும் சமமான எண்ணிக்கையில் வெற்றிபெற்றுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள் கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் அலைவீசத் தொடங்கிவிட்டதையே காட்டுகிறது” என்று சொல்லி இருக்கிறார்.

இதற்கு பதிலளித்திருக்கும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ”காங்கிரஸ் கட்சி ஒரு சில இடங்களைக் கூடுதலாக கைப்பற்றிவிட்டு பெரிய வெற்றி பெற்றுவிட்டதாக கூறிக்கொள்கிறது. ஊரக உள்ளாட்சிகளில் காங்கிரஸ் கட்சியைவிட நாங்கள் தான் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். அதுமட்டுமல்லாது, பல்வேறு பிரதான இடங்களை பாஜகவே வென்றுள்ளது. எனவே, 2023-ல் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வென்று கர்நாடகத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

x