தமிழகம் என்றால் எல்லாமே தாமதமா?


இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட இதர மாநிலங்களுக்கு நிவாரண நிதியை அள்ளித் தந்திருக்கும் மத்திய அரசு, தமிழகம் கோரிய வெள்ள நிவாரண நிதியை வழங்காது தாமதப்படுத்தி வருகிறது. இது குறித்து தமிழகம் என்றால் எல்லாமே தாமதமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் மக்களவை உறுப்பினரான சு.வெங்கடேசன்.

2021-ம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்களால் தமிழகம், குஜராத், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டன. இவற்றில் 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் மத்திய மானியமாக ரூ.3,063.21 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று(டிச.30) ஒப்புதல் வழங்கியது. இவற்றில் விடுபட்டிருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு!

இந்த பட்டியலில், புயல் பாதித்த மாநிலங்களில் குஜராத்துக்கு ரூ.1,133.35 கோடி, மேற்கு வங்காளத்துக்கு ரூ.586.59 கோடி, பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாமுக்கு ரூ.51.53 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.504.06 கோடி, மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.600.50 கோடி, உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ரூ.187.18 கோடி என நிதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளன.

இவையனைத்தும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் மத்திய மானியமாக வழங்கப்படுகின்றன. இவை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு ஏற்கனவே மாநிலங்களுக்கு விடுவித்த நிதிக்கு அப்பால் வழங்கப்படுவதாகும். நடப்பு நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.17,747.20 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3,543.54 கோடி வழங்கியுள்ளது.

இவை தவிர்த்து புயல்களால் பாதிக்கப்பட்ட குஜராத் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முறையே ரூ.1,000 கோடி மற்றும் ரூ.300 கோடி ஆகியவை, முதல்கட்ட உதவியாக கடந்த மே மாத இறுதியில் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது வெளியாகியிருக்கும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்களுக்கான வெள்ள நிவாரண ஒதுக்கீடு பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. இது தமிழக மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மதுரை எம்பியான சு.வெங்கடேசன் தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். ’எப்ப வரும்? தமிழகம் என்றால் எல்லாமே தாமதமா? அமித்ஷா தலைமையிலான குழு கூடி குஜராத், அசாம், கர்நாடகா, உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்திற்கு ரூ.3060 கோடி, புயல், வெள்ள நிவாரண நிதி அறிவித்துள்ளது. தமிழக அரசு கேட்ட ரூ.4625 கோடி எப்ப வரும்?’ என கேட்டுள்ளார்.

இதனையொட்டி, மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பது ஏன், பாராமுகம் சரியா, ஒரு மாநிலத்துக்கு மட்டும் எதிராக விரோதப்போக்கை கையாள்கிறதா.. என்று பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

x