பருவமழை பெய்து மேட்டூர் அணை நிரம்பிட வேண்டி கூட்டு பிரார்த்தனை @ சேலம்


மேட்டூர் அணையை ஒட்டிய 8 கண் மதகு பகுதியில் சர்வ மத பிரார்த்தனையில் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேட்டூர்: பருவமழை பெய்து மேட்டூர் அணை நிரம்ப வேண்டும் என அணை ஒட்டிய 8 கண் மதகு பகுதியில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, சர்வ மத கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் 100க்கும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கர்நாடகாவிடம் உரிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும், ராசி மணல் அணை கட்டுமான பணிகளை தொடங்கிட வேண்டும், மேகதாது அணை கட்டுமானத்தை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பூம்புகாரில் தொடங்கிய விவசாயிகள் நீதி கேட்டு பேரணி இன்று மாலை மேட்டூரில் நிறைவடைந்தது.

பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான குழுவினருக்கு மேட்டூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பருவமழை பெய்து அணை நிரம்ப வேண்டும் என அணை ஒட்டிய 8 கண் மதகு பகுதியில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, சர்வ மத கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் 100க்கும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. இதில் 30 அடிக்கு மண் தேங்கி தான் உள்ளது என கூறப்படுகிறது. அணையின் வலிமை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தண்ணீர் இல்லாமல் வறண்டு போனால் அணையின் கட்டுமானம் பாதிப்பு ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

எனவே, தமிழக அரசு உயர் மட்ட குழுவை அனுப்பி அணையை ஆய்வு செய்ய வேண்டும். நீர் ஆதாரங்களை மீட்பதில் தமிழக அரசு முடங்கி கிடக்கிறது. அணைகளால் தான் மாநிலம் வளர்ச்சி பெறும் என்ற அடிப்படையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். குடிமராத்து திட்டத்தை செயல்படுத்தாததால் ஏரி, குளங்களுக்கு நீர் கொண்டு செல்ல முடியாமலும், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அரிசி உற்பத்தியும் சரிந்துள்ளது. மேலும், வரும் காலத்தில் உணவு பஞ்சம் தட்டுப்பாடு ஏற்படும் பேராபத்து சூழல் உள்ளது.

விவசாயிகள் அழிந்தால் நாடு அழியும், கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ந்தால் விவசாயம் அழியும் என்பதை தமிழகம் முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களோடு தமிழக அரசு கைகோர்த்து இருப்பதால் தான் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.

அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளை வெளிப்படையாக நடக்க வேண்டும். அணை பகுதியில் கசிவு நீர் அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான ஆதாரங்கள் உரிய நேரத்தில் வெளியிடுவேன்” இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

x