கோடி பேர் வாக்களித்தால் ரூ.50-க்கு தரமான சரக்கு: பாஜக தலைவரின் பாட்டில் பேரம்!


சோமு வீர்ராஜு

ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவரான சோமு வீர்ராஜூ அள்ளிவிட்ட வாக்குறுதிகள் மற்றும் சாடல்கள், மக்களை ஒருசேர ரசிக்கவும் முகம்சுளிக்கவும் வைத்தது.

விஜயவாடாவில் நேற்று(டிச.28) நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய வீர்ராஜூ, ‘‘ஆந்திராவுக்கு நீண்ட கடற்கரைகள், ஏராளமான இயற்கை வளங்கள் இருந்தபோதும், மாநிலத்தை ஆண்ட, ஆளும் கட்சிகளான தெலுங்கு தேசமும், ஒய்எஸ்ஆர் காங்கிரசும் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை’’ என்று சாடினார். மிச்சமிருக்கும் கம்யூனிஸ்டுகள் பக்கம் தாவியவர் ‘’கம்யூனிஸ்டுகள் அனைவரும் நாட்டை வீணடித்தவர்கள்; இடதுசாரி கட்சிகள் அனைத்துமே குரைக்கும் நாய்கள்’’ என்று சாடினார்.

பின்னர் மக்கள் மனம் குளிர்வார்கள் என்று, ‘‘பாஜக ஆட்சி அமைத்தால் அமராவதியை தலைநகராக்கி அழகு பார்ப்போம். அடுத்த 3 வருடங்களில் இந்தப் பகுதியை முழுவதுமாய் மேம்படுத்திக் காட்டுவோம்’’ என்றார். இதன் தொடர்ச்சியாய் அவர் பேசியதுதான் அங்கே சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

”ஆந்திராவில் குடிப்பவர்கள் எண்ணிக்கை எப்படியும் ஒரு கோடி இருக்கும். இவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக மாதத்துக்கு ரூ.12,000 குடிப்பதற்காகச் செலவிடுகிறார்கள். மதுவின் பெயரால் உங்களிடமிருந்து பிடுங்கும் பணத்தை, நலத்திட்டங்கள் பெயரால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செலவழிக்கிறார். அதிலும் தரமற்ற மதுவையே தருகிறார்கள். மதுவின் கொள்ளை விலை காரணமாக அவை ஏழைகளுக்கு எட்டாது போகின்றன. வரும் 2024 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஒரு கோடி வாக்குகள் அளித்து வெற்றிபெறச் செய்தால், பாட்டில் மது ரூ.75-க்கு கிடைக்கச் செய்வோம். மாநில நிலைமை நன்றாக இருப்பின் ரூ.50-க்கு கூட தரத் தயாராக இருக்கிறோம். அதுவும் தரமான சரக்கு!’’ என்று உற்சாகமாகப் பேசினார். மது வகைகளில் பிரபலமான ரகங்களின் பெயர்களைச் சொல்லி, அவை ஆந்திராவில் கிடைக்காதது குறித்தும் வருத்தம் தெரிவித்தார்.

மத்திய முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட, மத்திய, மாநில கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து அதே மேடையில் பேசினார்கள். சோமு வீர்ராஜு பேசியவற்றை உஷாராக தவிர்த்துவிட்டே தங்கள் உரையை முடித்தார்கள்.

x