கட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கைதுசெய்யத் தயங்கிய போலீஸ்!


ஆர்ப்பாட்டத்தில்...

பொதுமக்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து, சீர்காழியில் போலீஸ் தடையை மீறி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றோர்

தமிழ்நாட்டில் பொது இடங்களுக்கு வருவதற்கும், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்வதற்கும் கட்டாயமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்று சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இது மனித உரிமைகளுக்கு எதிரான செயல் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எதிர்க்குரல் விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், இயற்கை வழி வாழ்வியலாளர்கள் என்ற அமைப்பின் சார்பில், கட்டாய தடுப்பூசிக்கு எதிராக டிச.29-ம் தேதி சீர்காழியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம்

இதில் மக்கள் அறிவியல் மையம் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்கள் வீ.புகழேந்தி, கோ.பிரேமா, சினிமா இயக்குநர் வ.கௌதமன், சுதந்திரத் தமிழகம் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ரோஸ் வெங்கடேசன், சித்த மருத்துவர் திருத்தணிகாசலம், வாழ்வியல் மருத்துவர் ஞான சுந்தரபாண்டியன், மரபு வாழ்வியல் பயிலகத்தின் காசிராமன் உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தடுப்பூசிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அறிவித்தபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். அதனால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்துக்காகப் போடப்பட்டிருந்த மேடையையும், அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் பிரித்து எடுத்துச் சென்றனர். அங்கிருந்த சிலரையும் காவல் துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

மேடை, பதாகைகளை அகற்றும் போலீஸார்

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த அனைவரும் ஊர்வலமாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்வதாக அறிவித்தனர். ஒருசில நிமிடங்கள் ஆர்ப்பாட்ட தலைப்பைப் பேசிய பின்பு கைது செய்யலாம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டதற்கு, போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. அதையடுத்து திருத்தணிகாசலம், மருத்துவர் பிரேமா, இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோர் கட்டாயத் தடுப்பூசியைக் கண்டித்துப் பேசினார்கள்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவர்களைக் கைதுசெய்ய வேண்டாம் என காவல் துறை தலைமையிலிருந்து உத்தரவு வந்தது. இதையடுத்து முன்னதாக அழைத்துச் சென்றவர்களையும் விடுவித்துவிட்டு போலீஸார் கலைந்து சென்றனர். “அரசியல் சாசனத்துக்கு விரோதமாக, கட்டாயமாக தடுப்பூசி போடவேண்டும் என்ற மத்திய - மாநில அரசுகளின் அறிவிப்புகளை ஒருவார காலத்துக்குள் திரும்பப்பெறாவிட்டால், ஜனவரி மாதத்தில் சென்னையில் பெரிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்” என்று அறிவித்துவிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களும் கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில்...

உலகம் முழுதும் கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தாலும், இந்தியாவில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகள் இல்லை. மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் முதல்முதலாக கட்டாயத் தடுப்பூசியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

x