மத்திய அரசின் நிதியை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்


வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தமிழகம் மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும் விரைவில் நிதி வழங்கிடக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதிப்பிலிருந்து மீட்கவும், சேதமடைந்த கட்டமைப்புகளை சரி செய்திடவும், போக்குவரத்து, பாசனம், கல்வி போன்றவற்றை மீண்டும் வழக்கமான நிலைக்குக் கொண்டுவரவும் மத்திய அரசின் நிதியை விரைவில் விடுவிக்க உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தக் கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்த நிலையில், அரசு விரைவாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு இயல்பு நிலையை மீட்டது. பெருமழையால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட மத்தியக் குழுவினர் கடந்த நவ.11-ல் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.1,510.83 கோடியும், சாலைகள், பாலங்கள், பொதுக் கட்டிடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளைச் சரிசெய்ய ரூ.4,719.62 கோடியும் நிவாரணமாகக் கோரி, ஒன்றிய அரசுக்கு கடந்த நவ.16, 25 மற்றும் டிச.15 தேதிகளில் விரிவாக அறிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன.

கரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள இச்சூழலில், மழை வெள்ள பாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளது. மாநிலப் பேரிடர் நிவாரண நிதியும் தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்துக்கான நிதியை விரைவாக ஒதுக்கீடு செய்து வழங்கிட உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறு’ கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

x