மதுரை ஆவினில் இருந்து திருப்பதிக்கு நெய் விநியோகம் செய்ததில் நடந்த முறைகேட்டில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்புள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக ஏற்கெனவே 2 வழக்குகள் பதியப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அவர் தலைமறைவாக, 8 தனிப்படைகள் அமைத்தும் சிக்காத ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்குத் தப்ப முடியாதபடி காவல் துறை லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியது. இருந்தும் அவரைக் கைது செய்ய முடியாமல் காவல் துறை திணறி வருகிறது.
ராஜேந்திர பாலாஜியின் மீது மேலும் பல புகார்கள் குவிந்துவரும் நிலையில், 13 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளவருக்கு அதிமுகவினர் சிலர் உதவி வருவதாக கிடைத்த தகவலின்பேரில், அதிமுகவினர் இருவரை விருதுநகர் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், மதுரை ஆவினிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாரிகள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இவ்விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜிக்கும் தொடர்பிருக்கிறதா என தற்போது விசாரணை தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஆவின் மேலாளர், அதிகாரிகள், கணக்கர்கள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மதுரை ஆவினில் 2019 முதல் நடைபெற்ற பணி நியமனங்கள், தற்காலிகப் பணி நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள், கொள்முதல், விற்பனைகளில் ஆவினுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம்(டிச.27) விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற பணி நியமனம், ஒப்பந்தம், விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை குறித்த அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். இதில் திருப்பதி லட்டு தயாரிப்புக்கு நெய் அனுப்பியது தொடர்பாகவும், தனியார் நிறுவனங்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் நெய் விநியோகம் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றியுள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர், விசாரணையை தொடர்கின்றனர்.