ராஜேந்திர பாலாஜி விவகாரம்; அதிமுகவினர் இருவர் கைது


கைது செய்யப்பட்ட இருவர்

பணமோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் போலீஸார் தேடிவரும் நிலையில், இன்று அதிமுகவைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதுகுறித்து ராஜேந்திர பாலாஜி உயர் நீதிமன்றக் கிளையில் கோரிய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அன்றிலிருந்தே (டிச.17) ராஜேந்திர பாலாஜி தலைமறைவானதாக விருதுநகர் எஸ்பி அறிவித்தார்.

தொடர்ந்து 8 தனிப்படைகள் அமைத்தும் சிக்காத ராஜேந்திர பாலாஜி, தனது முன்ஜாமீன் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய, தமிழக அரசு கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது; காவல் துறை லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியது. இருந்தும் அவரைக் கைது செய்ய முடியாமல் காவல் துறை திணறியது.

ராஜேந்திர பாலாஜியின் மீது மேலும் பல புகார்கள் குவிந்துவரும் நிலையில், 12 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளவருக்கு அதிமுகவினர் சிலர் உதவி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து நடத்தப்பட்ட ரகசிய விசாரணையைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் விக்கி என்கிற விக்னேஸ்வரன் மற்றும் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் ஏழுமலை ஆகியோரை விருதுநகர் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெறுவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

x