விசிக-வைச் சேர்ந்தவர் கொலை மிரட்டல்: நாராயணன் திருப்பதி புகார்


பாஜக செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி, தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து அரசியல் ரீதியிலான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஒருவர், நாராயணன் திருப்பதிக்கு ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுத்ததாக நேற்று (டிச.26) தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, “கொலை மிரட்டல். வீடு புகுந்து வெட்டுவார்களாம். இதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா அல்லது வழக்கம் போல் பாஜக மீது பாய்வீர்களா? சட்டம், ஒழுங்கு சீர்கேட்டின் அவலம்” ட்விட்டரில் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று சென்னை ஆணையர் அலுவலகத்தில் நாராயணன் திருப்பதி புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் தில்லை கருணாகரன் என்பவர், வீடு புகுந்து வாயில் வெட்டுவேன் என ட்விட்டர் பக்கத்தில் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அந்த நபரைக் கண்டறிந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாராயணன் திருப்பதி, “திமுக மற்றும் விசிக கட்சிகளைச் சேர்ந்த பலர் நாட்டின் பிரதமர் குறித்தும், பாஜக கட்சி மற்றும் நிர்வாகிகள் குறித்தும் தரம் தாழ்ந்த பதிவுகளை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அது குறித்து ஆதாரங்களுடன் பலமுறை புகார் அளித்தும் இதுவரை காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பாஜக-வைச் சேர்ந்த கல்யாண ராமன், மாரிதாஸ் மற்றும் கிஷோர் கே ஸ்வாமி ஆகியோரைப் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

x