பதவிகள் மீது ஆசை இல்லை: உதயநிதி ஸ்டாலின்


காளப்பட்டி கட்சி நிகழ்வில் உதயநிதி

கோவை அருகே கட்சி நிகழ்வில் பங்கேற்ற உதய நிதி ஸ்டாலின், தனக்கு பதவிகள் மீது ஆசை இல்லை என்றார்.

கோவை காளப்பட்டியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று(டிச.26) நடைபெற்றது. கட்சியின் இளைஞரணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சில் உதயநிதி பேசும்போது, “கோவை மக்கள் குசும்பு மட்டுமல்ல, ஏமாற்றவும் செய்து விடுகிறீர்கள். கடந்த தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்ற நம்பி இருந்தேன். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கோவை மக்கள் மீண்டும் எங்களை ஏமாற்றிவிடக் கூடாது” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசும்போது, “எந்தவொரு பொறுப்புக்கும் எப்போதும் நான் ஆசைப்பட்டது இல்லை. தலைவருக்கும் உங்களுக்கும் ஒரு பாலமாக மட்டுமே இருப்பேன்” என்றார்.

திமுக ஆட்சி அமைந்ததிலிருந்தே உதயநிதி அமைச்சராவார் என்ற பேச்சு வலுத்து வந்தது. உதயநிதியின் நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ், உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று ஆரம்பித்து வைத்த கோஷ்டி கானத்தை, இதர அமைச்சர்களும் வழிமொழிந்து வருகிறார்கள். ஆனால் அவை குறித்து எதுவும் பேசாதிருந்த உதயநிதி, கோவை மாவட்ட கட்சி நிகழ்வில் தற்போது வாய் திறந்துள்ளார்.

x