“திரும்பவும் கிளம்பிட்டாருப்பா” இப்படியான நையாண்டி பேச்சுகள் அதிமுகவில் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்பை இழந்ததால் வாடிப்போயிருந்த ஓபிஎஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை பத்திரப்படுத்திக் கொண்ட தெம்பில், மீண்டும் வாய்ஸ் கொடுக்க ஆரம்பித்திருப்பதே அதன் காரணம்.
சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்த உட்கருத்தைப் புதைத்து ஓபிஎஸ் சொன்ன குட்டிக்கதை, எடப்பாடிக்கே சொன்னதாகத்தான் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஊதாரித்தனமாக இருந்துவிட்டு மனம் திருந்திய மகனை, தந்தை ஏற்றுக்கொண்ட கதையைச் சொன்ன ஓபிஎஸ், பாவம் செய்தவர்களை மனம் திருந்தச் செய்வதற்காகவே பூமிக்கு வந்ததாக இயேசு கூறியதையும் சுட்டிக்காட்டினார். “மனம் திருந்தியவர்களை மன்னித்து ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு” என்று எடப்பாடிக்கு எடுத்துச் சொன்னார். இதுதான் அதிமுகவில் இப்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் இப்படி ஆழம் பார்ப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன், அக்டோபர் மாதம் தேவர் ஜெயந்திக்கு முன்னதாக இப்படி ஒரு பரபரப்பை அவர் பற்றவைத்தார். சசிகலாவை கட்சியில் சேர்ப்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘’சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்'' என்று அவர் சொன்ன பதில், கட்சிக்குள் அப்போது பூகம்பத்தையே ஏற்படுத்தியது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் இதற்கு போட்டிபோட்டுக் கொண்டு பதில்சொல்ல, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியோ, ”அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தமேயில்லை'' என்று சொல்லி ஒரேயடியாய் ஓபிஎஸ் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்போது 2-வது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார் ஓபிஎஸ்.
’’ஓபிஎஸ் திருந்தவே மாட்டார், யார் பேச்சையாவது கேட்டு அதன்படி அப்படியே நடப்பதுதான் அவரது பிறவிக்குணம். சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய பின்னர், ’துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சொன்னதால்தான் அதைச்செய்தேன்’ என்று சொன்னார். இப்போது சசிகலாவை சேர்க்கும்விதமான வார்த்தைகளை பேசுவதற்கு, எந்த மூர்த்தி சொல்லிக் கொடுத்தார் என்பது தெரியவில்லை. சுத்தமாக நம்பகம் இல்லாதவராக இருக்கிறார். சசிகலாவை எதிர்த்து வெளியே சென்றவர், அந்த காலகட்டத்திலேயே தினகரனை ரகசியமாக சந்தித்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
‘பணிவு பன்னீர்செல்வம்’ என்று கருணாநிதி சொன்னதைக் காப்பாற்றும் விதமாக அப்போது அம்மாவுக்குப் பணிவாக இருந்தவர், இடையில் சசிகலாவுக்கு பணிவாக இருந்தார். தற்போது திமுகவுக்கும் பணிவாக இருக்கிறார். கருணாநிதியை போற்றிப் புகழ்வதும், திமுகவின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக பேசுவதும் அதிமுகவினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், அவருக்கு அதற்கான பலன்கள் நிறையக் கிடைக்கின்றன.
எடப்பாடிக்கு ஆதரவானவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நடவடிக்கைகள் பாய்கின்றன. ஆனால், ஓபிஎஸ் மீதோ, அவரது ஆதரவாளர்கள் மீதோ திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவர் அதிமுககாரர்தானா என்பதே எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது” என்று கொந்தளிக்கிறார் டெல்டா மாவட்டத்து அதிமுக நிர்வாகி ஒருவர்.
ஆனால் எடப்பாடி, ஓபிஎஸ் கருத்துக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க விரும்பவில்லை. அவர் பாட்டுக்கு கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்லும் வேலைகளை கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் சார்பிலும், அதிமுக சார்பிலும் சமூகத்துக்கு சொல்லவேண்டிய விஷயங்களை சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் போன்றவர்கள் சொல்கிறார்கள். சசிகலாவை சேர்க்கவேண்டும் என்ற பொருள்பட ஓபிஎஸ் பேசும்போதெல்லாம், இவர்களிடமிருந்து அழுத்தமான வகையில் மறுப்பு வருவதும் வழக்கமாகியிருக்கிறது.
அந்த வகையில், தற்போது ஓபிஎஸ் சொல்லியிருக்கும் குட்டிக்கதைக்கும் ஜெயக்குமார் சூட்டோடு சூடாக பதில் கொடுத்திருக்கிறார். “ஓபிஎஸ் சொன்ன குட்டிக்கதை, பாமர மக்களுக்குத்தான் பொருந்தும், சசிகலாவுக்குப் பொருந்தாது, சசிகலா இல்லாமல் தற்போது அதிமுக நன்றாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது” என்பது ஜெயக்குமாரின் பதில். அதுதான் எடப்பாடியின் தீர்மானமான முடிவும்கூட. அதை இன்னும் உணர்ந்து கொள்ளாமல் பேசிக்கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்.
தனக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு செல்வாக்கு இல்லை என்பதை சசிகலா உணர்ந்து கொண்டுவிட்டார் என்பதை, அவரது நீண்ட மவுனத்திலிருந்து உணர்ந்து கொள்ளலாம். தஞ்சாவூருக்கு தீபாவளிக்கு வந்த சசிகலா, ஒரு வார காலம் அங்கு தங்கியிருந்தார். பலரும் அப்போது அவரை வந்து சந்தித்தார்கள். ஆனால், அதிமுக முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவில்லை.
இனி தொண்டர்கள் ஆதரவைப் பெற்று கட்சியை கைப்பற்ற முடியாது என்பதால். ஓபிஎஸ் மாதிரியான ஆட்களை சசிகலா தனக்கு ஆதரவாகப் பேசவைப்பதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. எடப்பாடியாரை சமாளிக்க சசிகலா தான் சரியான சாய்ஸாக இருக்கும் என கணக்குப் போட்டே, ஓபிஎஸ்சும் அந்தத் திசை நோக்கி காய்நகர்த்துகிறார். மொத்தத்தில் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சசிகலாவும் கட்சியில் வைத்துக் கொண்டே ஓரங்கட்டப்படும் ஓபிஎஸ்சும் திரைமறைவில் பேசிவைத்துக் கொண்டே, இந்த ஓரங்க நாடகத்தை அரங்கேற்றி வருவதாக ஓபிஎஸ் - சசிகலா நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.
ஓபிஎஸ்சின் குட்டிக் கதை குறித்து, டெல்டாவைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கேட்டதற்கு ’’மன்னிக்க முடிந்த தவறுகளைச் செய்தவர்களைத்தான் மன்னித்து ஏற்றுக்கொள்ள முடியும். ஒருங்கிணைப்பாளரும் அந்த கருத்தை அடிப்படையாக வைத்துத்தான் பேசியிருக்கிறார்” என்று மையமாகப் பதில் சொன்னார்.
இதுகுறித்து எடப்பாடி ஆதரவு வட்டத்தில் நாம் பேசியபோது, “ஓபிஎஸ்சை சசிகலா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதனால் அவர் தரப்பிலிருந்து யாரும் ஓபிஎஸ்சை தொடர்பு கொள்ளவும் வாய்ப்பில்லை. இருப்பினும் தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக ஓபிஎஸ், சசிகலா ஆதரவு பேச்சுகளை சம்மன் இல்லாமலேயே பொதுவெளிகளில் பேசிவருகிறார். எதையுமே ஒருமுறை சொன்னால் அதற்கு மதிப்பிருக்கும். ஓயாமல் சொல்லிக் கொண்டே இருந்தால் எந்தச் சொல்லுக்கும் மதிப்பில்லாமல் போய்விடும். எடப்பாடியார் இதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான், ஓபிஎஸ் பேசும் கருத்துகளைக் கேட்டு டென்ஷன் ஆகாமல் அமைதிகாக்கிறார். ஆக மொத்தத்தில், ஓபிஎஸ் எதிர்பார்க்கும் எந்த அதிசயமும் அதிமுகவுக்குள் நடக்கப்போவதில்லை. அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்” என்றார்கள்.
இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ அதிமுகவுக்குள்?