ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கி கணக்குகள் முடக்கம்


ராஜேந்திர பாலாஜி

பணமோசடி வழக்கில் போலீஸாரால் தேடப்படும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் மீது விருதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, அவர் தலைமறைவானார். இந்நிலையில் கடந்த 9 நாட்களாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 8 தனிப்படை அமைத்து அவரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

தேடப்படும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வெவ்வேறு காரில் தப்பிச் சென்று தலைமறைவானதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தெரிவித்திருந்தார். அவரைப் பிடிக்க கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க, கடந்த 23-ம் தேதி அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் அவரது பணப் பரிவர்த்தனையை தடுக்கும் வகையில், அவரது பெயரில் உள்ள 6 வங்கிக் கணக்குகளையும் முடக்கி காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

x