நீட் தோல்வியால் நீலகிரி மாணவி தற்கொலை


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகிலுள்ள ஓவேலி, பாரதி நகரை சேர்ந்த அருளானந்தம்-புஷ்பா தம்பதியரின் மகள் மகள் ஜெயா. பிளஸ் 2 முடிந்திருந்த இவர் இரண்டாவது முறையாக இந்த வருடமும் நீட் தேர்வெழுதி இருந்தார். அண்மையில் வெளியான அதன் முடிவுகளில் அவர் தகுதி மதிப்பெண்களை இழந்திருந்தார்.

நீட் தோல்வி காரணமாக மன உளைச்சலில் இருந்த ஜெயாவை மன மாறுதலுக்காக திருப்பூரை சேர்ந்த உறவினர் வீட்டுக்கு பெற்றோர் அனுப்பி வைத்துள்ளனர். அப்படியும் மன அழுத்தம் தாங்காது தவித்து வந்த ஜெயா அண்மையில் ஓவேலி திரும்பினார். டிச.18 அன்று வீட்டில் எவரும் இல்லாதபோது விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் ஜெயாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் நீண்ட சிகிச்சையில் போராடி வந்த ஜெயா டிச.23 அன்று உயிரிழந்தார். ஜெயா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார், தற்கொலை முயற்சிக்கு முன்னர் ஜெயா எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றினர்.

ஜெயா எழுதியதாக கண்டெடுக்கப்பட்ட கடிதம்

அதில் தனது நீட் தோல்வி குறித்தும், அதனால் எழுந்த மன உளைச்சல், அவற்றிலிருந்து தான் மீள முடியாது தவித்தது குறித்தெல்லாம் விளக்கமாக ஜெயா எழுதி உள்ளார். மேலும் தனது குடும்ப உறுப்பினர்களுடனான நெருக்கம், அவர்களை பிரியப்போவதன் வேதனை குறித்தெல்லாம் உருக்கமாக எழுதியவர் இறுதியாக தனது பாசத்துக்குரிய தாயிடம், ‘என்னை விட்டு உங்களால இருக்க முடியாதுன்னு தெரியும் அம்மா. தெரிஞ்சுதான் இப்படி பண்றேன். என்னை மன்னிச்சிடுங்க’ என்று எழுதியுள்ளார்.

இந்த கடிதத்திலிருந்து நீண்ட காலமாக மன உளைச்சலில் ஜெயா தவித்து வந்ததும், தற்கொலை எண்ணத்தில் உழன்று கிடந்ததும் தெரிய வருகிறது. தற்கொலை எண்ணம் தீவிரமான மன பாதிப்புகளுக்கு ஆளாக்கக் கூடியது. அப்படியான மனநிலையை தமக்கோ, அருகிலிருக்கும் பிறருக்கோ அடையாளம் காண்பவர்கள் உடனடியாக அரசின் மாநில உதவி மையத்தை நாடலாம். 104 என்ற கட்டணமற்ற பிரத்யேக எண்ணில் எப்போது வேண்டுமானாலும் உதவி மையத்தை தொடர்பு கொண்டு தீர்வு தேடலாம்.

x