பாதாள சாக்கடையில் இருந்து கழிப்பறை வழியாக விஷவாயு கசிந்து சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்பு


புதுச்சேரியில் விஷவாயு தாக்கி சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர் | படம்: எஸ்.எஸ்.குமார்

புதுச்சேரி: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் 4-வது தெருவைச் சேர்ந்தசெந்தாமரை (80) நேற்று காலை தனது வீட்டில் கழிப்பறைக்குச் சென்றபோது மயங்கி விழுந்தார். அவரை மீட்கச் சென்ற அவரது மகள்காமாட்சி (45), பேத்தி பாக்கியலட்சுமியும்(28) மயங்கி விழுந்தனர்.அதேபோல, சப்தம் கேட்டு அங்குசென்ற, பக்கத்து வீட்டைச் சேர்ந்தசெல்வராணி(16), அதே பகுதியைச்சேர்ந்த பாலகிருஷ்ணா ஆகியோரும் மயங்கி விழுந்தனர்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் விஷவாயு வெளியேறுவதாக தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மயங்கி விழுந்த 5 பேரும்அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். செந்தாமரை, காமாட்சி, செல்வராணி ஆகியோர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாக்கியலட்சுமி, பாலகிருஷ்ணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தப் பகுதியில் பொதுப்பணி,தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் திரண்டனர். அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, “பாதாளசாக்கடையில் ஹைட்ரஜன் சல்பேட்வாயு உருவாகி, கழிப்பறை வழியாகப் பரவியுள்ளது. அதுதான் உயிரிழப்புக்கு காரணம்” என்றனர்.

முதல்வர், அமைச்சர் ஆய்வு: முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டுக்கு இணைப்பு தரும் பணியில் ஒப்பந்ததாரர்களால் சில குளறுபடிகள் நடந்துள்ளன. அதனால் விஷவாயு கசிந்துள்ளது.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.30 லட்சம், இரு பெண்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்” என்றார்