விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு


விழுப்புரம்: உடல்நலக்குறைவு காரணமாக விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏவும், கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளருமான புகழேந்தி ஏப். 6-ம் தேதி காலமானார். இதையடுத்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கிடையில், சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன், திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகனானகௌதம சிகாமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளராக ஒன்றியசெயலாளர் எசாலம் பன்னீர், பாமக வேட்பாளராக முன்னாள் மாவட்ட செயலாளர் புகழேந்தி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் யார் என்று கணிக்க முடியவில்லை என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இந்த தொகுதியில் அதிமுக, திமுகவுக்கு நிலையான வாக்கு வங்கி உள்ளது. பாமக தனித்துப் போட்டியிடும் போதெல்லாம் ஒரே சிந்தனையில் வாக்களிக்கும் வன்னிய சமூகத்தினர், அக்கட்சி ஏதேனும் கூட்டணியில் அங்கம் வகிக்கும்போது, தங்கள் விருப்பம் போல வாக்களிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையை மாற்றிக் கொண்டுள்ள பாமக, இந்த தேர்தலில் கள மிறங்கவும் வாய்ப்புள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் 44 சதவீதம் வன்னியர்கள், 30 சதவீதம் பட்டியலினத்தவர்கள், 26 சதவீதம் பிற சமூகத்தினர் உள்ளனர். தற்போது திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்னியூர் சிவா வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

அதே நேரத்தில், பாமக, அதிமுக வேட்பாளர்களும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வன்னிய சமூகத்தினர் வாக்குகள் பிரியும். பிற சமூகத்தினர் வாக்குகளைப் பொறுத்து, வெற்றி-தோல்வி அமையும் என்றுஅரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

விக்கிரவாண்டியில் 2,34,173 வாக்காளர்கள்: விக்கிரவாண்டி தொகுதியில் 1,15,749 ஆண் வாக்காளர்கள், 1,18,393 பெண் வாக்காளர்கள், 31 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,34,173 வாக்காளர்கள் உள்ளனர். மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் 78.03 சதவீத வாக்குகள் பதிவாகின. திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக 72,188, அதிமுக 65,825, பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமக 32,198 வாக்குகள் பெற்றன. தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 8,352 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.