மாரிதாஸ் பொய்ப் பிரச்சாரம்; மே 17 திருமுருகன் காந்தி புகார்


மே 17 திருமுருகன் காந்தி

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, யூடியூபர் மாரிதாஸ் மீது இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் திருமுருகன் காந்தி கூறியதாவது: “யூடியூபர் மாரிதாஸ் தொடர்ந்து எங்கள் மீது பொய்யான தகவலை தனது யூடியூப் சேனலில் பரப்பி வருகிறார். திராவிட கட்சிகள் மற்றும் மே 17 இயக்கத்தினர் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதுடன், அவர்களுக்குப் பொருளாதார உதவிகள் செய்து வருவதாகவும் பொய்த் தகவலை பரப்புகிறார்.

எங்களுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தால் மத்திய பாஜக அரசு உளவுத்துறையை வைத்து நிரூபிக்க வேண்டியதை விடுத்து, மாரிதாஸை வைத்து தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் மற்றும் எங்கள் இயக்கத்தினரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது மாரிதாஸ் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் பாஜக கட்டுப்பாட்டின்கீழ் அதிமுக அரசு செயல்பட்டதே. திராவிட இயக்கங்கள் மட்டுமின்றி ஊடகவியலாளர்களையும் மாரிதாஸ் தனிப்பட்ட முறையில் இழிவாகப் பேசிவருவது கண்டிக்கத்தக்கது. திமுக அரசு உடனடியாக மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் அவர் மீது இன்று புகார் அளித்துள்ளேன்” என்றார்.

x