சென்னை: தமிழகத்தில் காங்கிரஸை முதன்மை கட்சியாக கொண்டு வரவேண்டும். இன்னும் எவ்வளவு காலம் பிறரை சார்ந்திருக்க போகிறோம் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசும்போது, தமிழகத்தில் காங்கிரஸ் எந்த திசை நோக்கி செல்லவேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க வேண்டும். முதன்மை கட்சியாக காங்கிரஸை கொண்டு வர வேண்டும். பிறரை சார்ந்து இருக்கப் போகிறோமா அல்லது சுயமாக இருக்கப் போகிறோமா என நாம் சிந்திக்க வேண்டும். தோழமை வேறு. அதற்கு உண்மையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் எவ்வளவு காலம் சார்ந்திருக்க போகிறோம் என்பது தொடர்பாக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கலாம் என்றார்.
மேலும் அவர் பேசியதாவது: தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். எனவே, தலைவர்கள் பேசும்போது கூச்சலிடக்கூடாது. திமுகவை தவறாக பேசினால் நான் முதலில் குரல் கொடுப்பேன். அதெல்லாம் வேறு, காங்கிரஸ் கட்சிக்கு உள்ள கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் வேறு. காமராஜர் ஆட்சி பற்றி பேசுவது நமது தார்மீக உரிமை.
நம் கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும். வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும். இதை செயல்படுத்தாமல் கூட்டணி கட்சியினர் மதிக்கவில்லை என்று கூறுவதில் அர்த்தமில்லை. உழைப்பவர்களுக்கும், கட்சியில் விசுவமாக இருப்பவர்களுக்கும் தகுந்த பொறுப்புகளை வழங்கவேண்டும். இவ்வாறு பேசினார்.
அதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலர் பேசினர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது, காமராஜர் புகழைப் பாட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. யாராக இருந்தாலும் காமராஜர் பெயரைச் சொல்லித்தான் ஆட்சி செய்ய வேண்டிய நிலை இன்றும் இருக்கிறது. காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்று எனக்கும் ஆசைதான். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 பெற்றிருப்பதற்கு அதற்கு காரணம் திமுகவும் முதல்வர் ஸ்டாலினும் என்பதை மறந்துவிடக் கூடாது.
தனியாகப் போட்டியிட்டபோது சிவகங்கை, கன்னியாகுமரியில் மட்டும் 1 லட்சம் ஓட்டுகள் வாங்கி தோற்றோம். மற்றவற்றில் டெபாசிட் போனது. யாருக்கு ஆசை இல்லை. நாம் வர வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் நம் எதிரியை வீழ்த்த வேண்டும் என்பது தான் முக்கியம். அதற்கான பாதையை தேர்ந்தெடுத்துப் போகவேண்டும். அதைவிடுத்து நான்தான் வெல்வேன். தனியாக நிற்பேன். தனியாகப் போவேன் என்று போய் தோற்பது உங்கள் இஷ்டம்.
உங்களுக்கு இருக்கும் அதே உணர்ச்சி எனக்கும் உண்டு. காமராஜர் ஆட்சி அமைப்பதில் எனக்கும் உடன்பாடுதான். அதற்கு சிறிது தந்திரம் வேண்டும். எதிரியை ஒழிக்க வேண்டும். நாற்காலி காலியானால்தான் அமர முடியும். இவ்வாறு பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸின் வாக்கு வங்கியை அதிகரிக்க மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களும் நிறைவாக மாநில தலைவர் தலைமையில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடைபெறும் என்றார்.
காங்கிரஸ் தேசிய செயலாளர் சிரிவெல்ல பிரசாத், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்.பி.க்கள் பீட்டர் அல்போன்ஸ், விசுவநாதன், பேரவைகாங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், ஜோதிமணி எம்.பி. உள்ளிட்டோர் பேசினர்.
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல்காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.