எலும்பு வங்கியால் என்ன பயன்?


மதுரையில், எலும்பு வங்கியை இன்று (டிச.21) தொடங்கிவைத்திருக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். எலும்பு அறுவை சிகிச்சைகளுக்கு ஏற்றவாறு தானமாகப் பெறப்படும் எலும்புகளைச் சேகரிக்கும் வகையில் இந்த வங்கி செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

“விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் முறிவு ஏற்பட்டு மீண்டும் இணைக்க முடியாத எலும்புகள் அனைத்தும் விபத்து ஏற்பட்ட 14 மணி நேரத்துக்குள் சேகரிக்கப்படும். அவை மதுரையில் உள்ள வங்கியில் 5 ஆண்டுகள் பாதுகாக்கப்படும். விபத்து மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த எலும்புகள் பயன்படுத்தப்படும்” என்று கூறியிருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இந்த எலும்பு வங்கியின் முக்கியத்துவம் என்ன எனப் பொதுநல மருத்துவர் கு.கணேசனிடம் கேட்டபோது, “1988-ல் இந்தியாவின் முதல் எலும்பு வங்கி மும்பை டாடா நினைவு மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் எலும்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் கோவை கங்கா மருத்துவமனையில்தான் முதல் எலும்பு வங்கி தொடங்கப்பட்டது.

பொதுநல மருத்துவர் கு.கணேசன்

புற்றுநோய், விபத்து மட்டுமல்ல, கிருமித் தொற்றின் காரணமாகவும் எலும்புகள் பாதிப்படைகின்றன. இந்தப் பாதிப்பை எதிர்கொள்பவர்களுக்கு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும். அதற்குத் துணை நிற்பதுதான் எலும்பு வங்கி” என்றார்.

மேலும், “உடல்தானம் செய்ய ஒப்புக்கொண்டவர்கள் இறக்கும்போது இயல்பாக அவர்களின் உடல்களிலிருந்து எலும்புகள் சேகரிக்கப்படும். அதேபோல் விபத்துகள், மூளைச்சாவு போன்றவற்றின் காரணமாகச் செயலிழந்திருப்பவர்களிடமிருந்தும் எலும்புகள் சேகரம் செய்யப்படும். குறிப்பாக, மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உறவினர்களிடம் பேசி, உறுப்பு தானத்துக்குச் சம்மதம் பெற்று எலும்புகளைச் சேகரிப்பது வழக்கம். சம்பந்தப்பட்ட நபரின் உடல்நிலை பரிசோதிக்கப்படும். நோய்த் தொற்று இருக்கிறதா என்பதும் உறுதிசெய்யப்படும். எலும்புகளை அகற்றுவதும் பாதுகாப்பதும் எளிதான விஷயங்கள்தான். உயிரோடு இருப்பவர்களும் எலும்பு தானம் செய்ய முடியும். இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், நல்ல ஆரோக்கியமான நிலையில் இருப்பவர்கள் பந்துக்கிண்ண மூட்டு எலும்பை தானமாகத் தர முடியும். விபத்துக்குள்ளாகின்றவர்களுக்குப் பிரதானமாக ஏற்படும் பாதிப்பு எலும்பு முறிவதுதான். பொதுவாக எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொள்பவர்களுக்கு பிளேட்டுகள், ஸ்க்ரூக்கள் வைப்பதே வழக்கமாக இருக்கிறது. அதை ஒப்பிட எலும்பு மாற்று அறுவை சிகிச்சையில் செலவும் மிகக் குறைவுதான். எனவே, இந்த முயற்சி நிச்சயம் பலன் தரும்” என்றார் கு.கணேசன்.

x