குமரி சுற்றுலாத்தலங்களில் மீண்டும் அனுமதி ரத்து


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வரும் 31 முதல் 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சர்வதேசச் சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முக்கடல் அழகையும் தாண்டி, ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டில் பாலம், காளிகேசம், சொத்தவிளை கடற்கரை, பத்மநாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, உதயகிரி கோட்டை என குமரிமாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலா தலங்கள் உள்ளன. அதிலும் இப்போது சபரிமலை சீசனும் களைகட்டியுள்ளது. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சபரிமலைக்குச் செல்பவர்களும் ஆன்மிக யாத்திரையாகவும், சுற்றுலாவாகவும் குமரி மாவட்டத்துக்கு இந்த சீசனில் வருவது வழக்கம்.

இதேபோல் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், புதிதாக பிறக்கும் புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தைக் காணும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மக்கள் திரள்வதும் வழக்கம்.

இந்நிலையில், குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவருகிறது. சமீபத்தில்கூட நாகர்கோவில் கார்மல் பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று தலைதூக்கி வருவதால், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், புத்தாண்டுக்கு சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும்வகையில் வரும் டிச.31 முதல் ஜன. 2-ம் தேதிவரை 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு, மாவட்டம் முழுவதிலும் இருக்கும் சுற்றுலாத் தலங்களில் அனுமதி இல்லை என அறிவித்துள்ளார்.

x