சென்னை: போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதுடன், மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என்று மாவட்டஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் முக்கியமான துறைகளின் திட்டங்களின் செயல்பாடு, புதிய திட்டங்களை அமல்படுத்துவது ஆகியவை தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா 3 கட்டங்களாக ஆய்வு நடத்துகிறார். இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டம் தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த முதல் நாள் கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: அடுத்த 2 ஆண்டுகள் தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பாட்டுக்கு மிக முக்கியமானது. புதிய உத்வேகத்துடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
ஒரு சிறந்த நல்லாட்சியை வழங்க, சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, சிறந்த சமூகநலத் திட்டங்கள், கட்டமைப்பு வசதி மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்குவது, தங்கு தடையின்றி அரசு சேவைகள் பொதுமக்களுக்கு கிடைப்பது ஆகிய நான்கிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழகம் நோக்கி வருகிறது. இவை அனைத்தும் தொய்வில்லாமல் வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும்.
‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் ஜூலை 15 முதல் செப்.15-ம் தேதி வரை கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படுகிறது. ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ மற்றும் ‘நீங்கள் நலமா?’ போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. வருவாய்த் துறையில் பட்டா மாறுதல், சான்றிதழ்களைப் பெறுவதில் பொதுமக்கள் அடையும் சிரமங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளன. ஆட்சியர்கள் அனைவரும் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
‘கலைஞர் கனவு இல்லம்’, 2.5 லட்சம் தொகுப்பு வீடுகள் புனரமைப்பு திட்டப்பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும். ‘முதல்வரின் காலை உணவு’ திட்டம் கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஏற்படும் இயற்கை இடர்ப்பாடுகளின் காரணமாக பணிகள்தாமதப்படும் என்பதால், கிடைத்துள்ள குறுகிய காலத்துக்குள் உங்கள் மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை நல்ல தரத்துடன் விரைவாக முடிக்க வேண்டும்.
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளோம். இது போதாது.முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்காக பெரும் இயக்கத்தை நாம் தொடங்க உள்ளோம். மாவட்டஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், சுகாதாரம், நகராட்சி அலுவலர்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் பயன்பாட்டை உங்கள் மாவட்டத்தில் முற்றிலும்ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்படும் பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தவேண்டும். ‘போதை பொருட்களின்நடமாட்டம் அறவே இல்லை, முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்’ என்ற நிலையை உருவாக்கவேண்டும்.இக்கூட்டத்தில் முக்கியதிட்டங்கள் குறித்து தலைமைசெயலர் வழங்கும் அறிவுரைஅடிப்படையில், மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்