முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க, ஏற்கெனவே 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் பெங்களூருவில் முகாமிட்டுள்ளதால், அவர் இன்றே கைதாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது, 5 பிரிவுகளின்கீழ் 2 வழக்குகள் தொடரப்பட்டன. இதை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு போலீஸார் இவரை கைது செய்ய முடிவுசெய்தனர்.
முன்ஜாமீன் கிடைக்கவில்லை என்றதும் கடந்த வெள்ளிக்கிழமையே ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். இதையடுத்து இவரைப் பிடிக்க மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தன.
தொடர் விசாரணையில், இவரின் செல்போன்கள் போலீஸின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. ராஜேந்திர பாலாஜியுடன் போனில் பேசிய 600 பேரின் எண்களை போலீஸார் சோதனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பழைய மாடல் பட்டன் போன் ஒன்றில் ராஜேந்திர பாலாஜி புது சிம் போட்டு பயன்படுத்தி வருவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த போன் மற்றும் அதற்கு சென்ற அழைப்புகளின் அடிப்படையில் அவரின் இருப்பிடத்தை போலீஸ் கண்டுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி ராஜேந்திர பாலாஜி பெங்களூருவில் இருக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய, விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தற்போது கூடுதலாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 8 தனிப்படைகள் தமிழகம், கேரளா, பெங்களூரு என பல்வேறு மாநிலங்களில் ராஜேந்திர பாலாஜியைத் தேடிவருகிறார்கள்.
தனிப்படை போலீஸார் பெங்களூருவிலும் முகாமிட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்றே கைதாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.