குமரியை குப்பையில்லா மாவட்டமாக மாற்றும் நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு


குப்பையில்லா குமரியாக மாற்றும் நடவடிக்கையாக குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பகுளத்தினை அமைச்சர் மனோதங்கராஜ் பார்வையிட்டார்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லா மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான முன்னெடுப்பு பணிகள் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்டத்திற்குட்பட்ட உணவு விடுதி உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், அப்டா மார்கெட் வியாபாரிகள் உள்ளிட்டோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக கீழ்தளத்தில் உள்ள காணொலி காட்சி அரங்கில் இன்று பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்தாய்வு மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “குப்பையில்லா குமரி என்ற திட்டத்தை நிறைவேற்றவேண்டுமானால் அதற்கு மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது ஆகும். எனவே, இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகள் தேங்குவதை தடுத்தல், வீட்டுக்கு வீடு கழிவுநீர் உறிஞ்சு குழிகள் அமைத்தல், இயற்கை வளத்தையும், சுற்றுப்புற சுகாதாரத்தையும் பேணிக்காக்கும் வகையில் நாம் அனைவரும் மரங்களை நடவு செய்தல், குளங்களை பராமரித்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்துதல்,

குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து கொடுத்தல், மக்கும் குப்பைகளை குழாய் வழி உரமாக்குவது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை முன்வைத்து இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டத்திலுள்ள நீர் நிலைகள், நிலம், காற்று உள்ளிட்டவை மாசு அடையாமல் பாதுகாக்க வேண்டும். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு முறை பயன்டுத்தப்படும் பிளாஸ்டிக் ஒழிப்பை 100 நடைமுறைப்படுத்தும் முயற்சியினை முழு வீழ்ச்சில் துரிதமாக மேற்கொண்டு வருகிறோம். அதற்கு ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்களுக்கு இத்தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில் அருகிலுள்ள தெப்பக்குளத்தை பார்வையிட்ட அமைச்சர், அக்குளத்தை தூய்மைபடுத்துவது குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

x