தமிழகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு பயண நிரல்களுடன், ஜன.12-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார்.
வடக்கே 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, பிரதமரின் பயணங்கள் அங்கே அதிகரித்துள்ளன. மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, அரசுகளின் சாதனைகளை பட்டியலிடுவது என பிரதமரை முன்னிறுத்திய பொதுநிகழ்வுகளில் கவனம் ஈர்க்கச் செய்கிறார்கள். உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த வகையிலான மோடியின் அதிகப்படி அரசு அலுவல் பயணங்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன.
இதற்கு மத்தியில் பிரதமரின் தமிழக விஜயத்துக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜன.12 அன்று தமிழகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை அவர் திறந்து வைக்க உள்ளார். விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவுக்காக தயாராக உள்ளன.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் பிரதமரின் முதல் தமிழக விஜயம் என்பதால், எதிர்பார்ப்புகள் அதிகம் எழுந்துள்ளன. அரசு விழா என்பதால் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
பாஜகவைப் பொறுத்தவரை மோடி, அமித் ஷா போன்ற தலைவர்களின் வருகையின்போது பெரும் உற்சாகம் அடைவார்கள். காங்கிரசுக்கு நிகராக கோஷ்டி உரசல்கள் அதிகரித்து வரும் பாஜக, மோடி வருகையை முன்னிட்டு ஒருமுகமாகத் திரள உள்ளது.
பொங்கல் தருணம் என்பதால், பிரதமர் மோடியை அநேகமாக பட்டு வேட்டி, துண்டுடன் பொதுநிகழ்வுகளில் எதிர்பார்க்கலாம். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் இறந்ததை முன்னிட்டு, வெலிங்டனில் பிரதமர் அஞ்சலி செலுத்துவதற்கான வாய்ப்புகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.