நெல்லை பள்ளியின் தாளாளர், ஒப்பந்ததாரர் சிறையில் அடைப்பு


நெல்லையை சேர்ந்த சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று(டிச.17) முற்பகல் இடைவேளையின்போது, கழிவறையின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய 7 மாணவர்களில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காயமடைந்த 4 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக, பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமையாசிரியை ஞானசெல்வி, ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய 3 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் தலைமையாசிரியை ஞானசெல்விக்கு உடல்நலம் குன்றியதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தாளாளர் சாலமன் செல்வராஜ், ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதை அடுத்து அவர்களி இருவரும் சிறையில் அடைக்கபட்டனர்.

இதற்கிடையே தமிழகம் நெடுக பள்ளிக் கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி வளாகத்திலுள்ள வகுப்பறைகள், கழிப்பறை மற்றும் சுற்றுச் சுவர்கள் எப்போது கட்டப்பட்டவை, அவற்றின் உறுதித் தன்மை எவ்வாறு உள்ளது, அண்மை மழை அல்லது இதர காரணங்களால் கட்டிடத்தின் உறுதிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உடனடியாக ஆராய்ந்து, இந்த கண்காணிப்பு அலுவலர்கள் அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளனர். அதன் அடிப்படையில் தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

x