திற்பரப்பு அருவியில் எட்டு மாதங்களுக்குப் பின்பு சுற்றுலா பயணிகள் நேற்று மாலை முதல் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ’குற்றாலத்துக்கு நீதி..திற்பரப்புக்கு அநீதியா?’ என்னும் தலைப்பில் காமதேனு இணையதளத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குமரிமாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பது திற்பரப்பு அருவி. அதிலும் இப்போது சபரிமலை சீசன் உச்சத்தில் உள்ளது. வழக்கமாக சபரிமலை சீசன் நேரங்களில் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். அவர்கள் சபரிமலை செல்லும் வழியிலேயே பல ஆன்மிக தலங்களையும், சுற்றுலா தலங்களையும் பார்த்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில் இந்த நேரத்தில் எல்லாம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மிக யாத்ரிகர்களால் கூட்டம் களைகட்டும். ஆனால் கரோனா இரண்டாம் அலைக்குப் பின் கடந்த 8 மாதங்களாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் தான் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவியில் வரும் 20 ஆம் தேதி முதல் சுற்றுலாப்பயணிகளை அனுமதிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கான அறிவிப்பு கடந்த 4-ம் தேதியே வெளியாகிவிட்ட நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது பற்றி எந்த தகவலும், முன்னேற்பாடும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தான் காமதேனு இணையதளத்தில் இது குறித்து 'குற்றாலத்துக்கு நீதி...திற்பரப்பு அநீதியா? ' என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியின் எதிரொலியாக நேற்று முதல் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்கக்கோரி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திற்பரப்பு பேரூராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது.
https://www.kamadenu.in/regional/when-to-allow-tourists-on-thirprappu-falls
அதன்படி, இனி திற்பரப்பு அருவியில் தினசரி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில், கரோனா கால நடைமுறைகளையும் சுற்றுலா பயணிகள் பின்பற்ற வேண்டும். திற்பரப்பு அருவியில் வியாபாரம் செய்யும் வணிகர்கள் அனைத்துக் கடைகளிலும் சானிட்டைசர், முகக்கவசமும் வைத்திருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்திருக்கும் சுற்றுலா பயணிக்கு மட்டுமே பொருள்களை விற்க வேண்டும். அடிக்கடி கைகளை சானிட்டைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் எனவும் திற்பரப்பு பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.