சேலம்: சேலம் உழவர் சந்தைகளில் தக்காளி விலை கிலோ ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. மழை காரணமாக, சேலத்துக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. வெளிச் சந்தைகளிலும் தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில், முகூர்த்த நாட்களால் தேவை அதிகமாகி, தக்காளி விலை உயர்ந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை உள்பட மாவட்டத்தில் 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை, நாளொன்றுக்கு சராசரியாக 250 டன் அளவுக்கு விற்பனையாகின்றன.
உழவர் சந்தைகளுக்கு, இடைத்தரகர்கள் இன்றி, விவசாயிகளே நேரடியாக காய்கறிகளைக் கொண்டு வருவதால், வெளிச் சந்தையை விட, உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விலை குறைவாகவே இருக்கும், எனவே, பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் உழவர் சந்தைக்கு வந்து, காய்கறிகள், பழங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், இன்று தக்காளி விலை உழவர் சந்தை மற்றும் வெளிச் சந்தைகளில் கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நம்மிடம் பேசியவர்கள், “தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில், சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தக்காளி பயிரிட்டுள்ள இடங்களில் மழை காரணாக, தக்காளி காய்கள் பழுக்காமல் செடியிலேயே அழுகுவது, செடியில் உள்ள பூக்கள் உதிர்வது ஆகியவை அதிகரித்தன. இதனால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் சந்தைகளுக்கு தற்போது ஆந்திர மாநிலம் பழமனேரி, மதனப்பள்ளி, கர்நாடகா மாநிலம் ஒட்டப்பள்ளி, சீனிவாசபுரம் ஆகிய இடங்களில் இருந்து தக்காளி அதிகமாக கொண்டு வரப்படுகிறது. ஆனால் மழை காரணமாக, அங்கும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து, சேலம் சந்தைக்கு 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி தினமும் 3,000 எண்ணிக்கையில் வந்து கொண்டிருக்கும்.
தற்போது 1,500 முதல் 1,700 பெட்டிகள் தான் வருகின்றன. சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய 30 கிலோ கொண்ட தக்காளி பெட்டிகளின் எண்ணிக்கை 600-ல் இருந்து, தற்போது 100 ஆக குறைந்துவிட்டது. இந்நிலையில், முகூர்த்த நாட்கள் காரணமாக, தக்காளி விற்பனை அதிகரித்துள்ளது. தேவை அதிகம் இருப்பதால் அதற்கேற்ப விலையும் உயர்ந்துள்ளது. உழவர் சந்தைகளில் தக்காளி விலை கிலோ ரூ.45 முதல் ரூ.50 ஆக இருந்த நிலையில், இன்று கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விலை உயர்ந்துள்ளது. இதேபோல், சேலம் வஉசி சந்தை, பால் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தக்காளி கிலோ ரூ.70-க்கு மேல் விற்பனையாகிறது” என்றனர்.