உபி தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி


கேஜ்ரிவால்

டெல்லியில் கட்சியைத் தொடங்கி ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால், பிறமாநிலங்களில் போட்டியிட்டு நிகழ்ந்த படுதோல்வியால், ’இனி டெல்லியை விட்டு எங்கும் செல்லமாட்டேன்’ என அறிவித்திருந்தார். 2015-ல் அளித்த இந்த அறிவிப்புக்குப் பின், ஆம் ஆத்மி மீண்டும் மற்ற மாநிலத் தேர்தல்களில் போட்டியிடத் தயாராகி வருகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட முடிவெடுத்திருக்கிறது. இங்கு ஆளும் பாஜகவைத் தோற்கடிக்கும் முயற்சியில் கேஜ்ரிவால் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார். இதற்காக அவர், தமது பிரச்சாரத்தை தலைநகர் லக்னோவிலிருந்து ஜன.2-ல் தொடங்க உள்ளார்.

இதுகுறித்து ‘காமதேனு’ இணையத்திடம் ஆம் ஆத்மி கட்சியின் உபி பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய்சிங் கூறும்போது, ‘‘உபியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.5,000 உதவித்தொகையுடன் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளார்” எனத் தெரிவித்தார்.

டெல்லியில் 2-வது முறையாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மின் கட்டணப் பாக்கியை தள்ளுபடி செய்துள்ளது. இத்துடன் 300 யூனிட்டுகள் வரை மின்சாரம் இலவசமாகவும் அளித்து வருகிறது. அம்மாநில விவசாயிகளுக்கு 24 மணிநேர மின்சாரமும் அளிக்கப்படுவதைத் தனது தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மி குறிப்பிட்டிருந்தது. இதுபோல், தேர்தல் சமயத்தில் அளிக்கும் வாக்குறுதிகளுக்கு முதல்வர் கேஜ்ரிவால் முன்னுரிமை அளித்து நடைமுறைப்படுத்தியும் வருகிறார். இதனால், தம் கட்சி மீது மற்ற மாநில வாக்காளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும் என கேஜ்ரிவால் கருதுகிறார்.

டெல்லிக்கு வெளியே, 2017 பஞ்சாப் தேர்தலில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சி நிலையைப் பெற்றது. இதனால், அம்மாநிலத்திலும் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீவிரம் காட்டி வருகிறார் கேஜ்ரிவால். இந்தப் போட்டிப் பட்டியலில் தற்போது உபியும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் பிரச்சாரக் கூட்டத்தில், டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் உரையை கேட்க அதிக எண்ணிக்கையில் கூட்டம் சேரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் சஞ்சய்சிங் கூறும்போது, ‘‘மக்களுக்கானப் பிரச்சினைகள் மீதான அரசியலை எந்தக் கட்சியும் உபியில் செய்ததில்லை. இங்கு ஆம் ஆத்மி போட்டியிட முடிவு செய்தபின் தான், அக்கட்சிகள் மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசத் தொடங்கி உள்ளனர். எனவே, ஆம் ஆத்மிக்கு உபி வாக்காளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

உபி பட்ஜெட் ரூ.550 லட்சம் கோடி

உபியில் ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர்களுக்கான புதிய அறிவிப்பால் மாதம் ஒன்றுக்கு ரூ.1,700 கோடியும், வருட செலவாக ரூ.20,400 கோடியும் மதிப்பிடப்பட்டுள்ளன. இதை, ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.550 லட்சம் கோடி கொண்ட உபியில் ஒதுக்குவது பெரிய விஷயமல்ல எனவும் ஆம் ஆத்மி கருதுகிறது. இதைவிட அதிகமான சலுகைகளை முதல்வர் கேஜ்ரிவால் தனது பஞ்சாப் பிரச்சாரங்களில் அறிவித்துள்ளார். இதில், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், 18 வயது நிரம்பிய அனைத்துப் பெண்களுக்கும் மாதச்செலவாக ரூ.1,000 அளிப்பது முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.

உபியில் வலுவான எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி உருவாகி வருகிறது. இதற்காக சட்டப்பேரவை தேர்தலில் உபியின் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருகிறார் அதன் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ். இவருடனும் கூட்டணிக்காக ஆம் ஆத்மி கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், எந்த உடன்படிக்கையும் ஏற்படாததால், உபியில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட முடிவுசெய்துள்ளது.

x