மேற்கு வங்க ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மம்தாவின் பரிசு


மேற்கு வங்க ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பரிசுத் தொகை திட்டத்தை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 4 தூண்களில் முக்கியமான ஒன்று அரசு அதிகாரிகள். இவர்களை மற்றொரு தூணான அரசியல்வாதிகள் தன்வசப்படுத்தும் முயற்சி எங்கும் எப்போதும் நடப்பதுண்டு. இந்தவகையில், திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத்தில் அரசு உயர் பதவிகளிலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை கவரும்படியான ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் அதிகாரிகளைக் காணவரும் விருந்தாளிகளை கவனிக்கத் தனியாக ஒரு தொகை ஒதுக்கி, மாநில முதல்வரான மம்தா பானர்ஜி புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

இதில், மேற்கு வங்க மாநிலத்தின் தலைமைச் செயலாளரும், கூடுதல் தலைமைச் செயலாளரும் தலா மாதம் ஒன்றுக்கு ரூ.34,000 கூடுதலாகப் பெற உள்ளனர். முதன்மைச் செயலாளர்களுக்கு ரூ.20,000, துறைச் செயலாளர்களுக்கு ரூ.17,000 மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு ரூ.5,000 அவர்களது ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட உள்ளது. நவ.1 முதல் இந்தப் பரிசுத்தொகை நடைமுறைக்கு வருகிறது.

இதுபோல் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான சிறப்பு படித்தொகை மேற்கு வங்க மாநிலத்தில் அளிப்பது இதுவே முதன்முறையாகும். இம்மாநிலத்திலும் மற்ற அரசுகளைப் போல், கரோனா பரவலால் ஏற்பட்ட நிதிக்குறைப்பாடு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில், இந்தச் சிறப்புத் தொகை அவசியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுபோன்ற படித்தொகை மத்திய அரசின் அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 கிடைப்பதாகத் தெரிகிறது. இதற்கும் அதிகமாக மேற்கு வங்க மாநிலத்தின் அதிகாரிகளுக்கு அளிக்கப்படவிருக்கும் தொகை மிகவும் அதிகம் எனவும் கருதப்படுகிறது.

தற்போது, முதல்வர் மம்தாவின் இந்தப் பரிசு அறிவிப்பு மேற்கு வங்க மாநில அதிகாரிகளிடையே பெரும் சர்ச்சைக்குரிய பேச்சாகி விட்டது. ஏனெனில், பொதுமக்களுக்கானப் பல சமூக நலத்திட்டங்கள் நிதிநெருக்கடியால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இந்தப் படித்தொகை தேவையா எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.

x