நெல்லையில் பள்ளிச் சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு


இடிந்து விழுந்த சுவர்

திருநெல்வேலி பொருட்காட்சித் திடல் அருகே உள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியில், கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். உயிரிழந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார்

நெல்லை சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் வழக்கம்போல் இன்று காலை வகுப்புகள் நடந்துவந்தன. காலை 11 மணிக்கு இடைவேளை விடப்பட்டது. அப்போது கழிப்பறைக்குச் சில மாணவர்கள் சென்றனர். அந்தநேரத்தில் கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் மாணவர்கள் அன்பழகன், விஸ்வா ரஞ்சன், சுதீஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் எம்.இசக்கி பிரகாஷ், எஸ்.சஞ்சய், ஷேக்கு அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவர்கள் 9-ம் வகுப்புப் படித்துவந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் பெய்த கனமழையால் பள்ளிக்கூட கழிப்பறைச் சுவர் கடும் சேதமாகி இருக்கிறது. ஆனால், பள்ளி நிர்வாகம் இதைப்பற்றிக் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

சக மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். விபத்தைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து பிற மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இருந்தும் பள்ளி நிர்வாகத்தின் கவனமின்மையால் ஆத்திரம் அடைந்த சில மாணவர்கள் மேசை, நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை சமாதனப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். தொடர்ந்து காவல் துறை உயர் அதிகாரிகள், பள்ளி கல்வித் துறை அதிகாரிகள், ஆட்சியர் என அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் விபத்து நடந்த பள்ளியை நேரில் சென்று பார்வையிட்டார்.

சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த துயர சம்பவத்தை அறிந்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சமும், காயமுற்ற 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

x