மதுரை: மக்களவை தேர்தல் பணியில் இருந்த காவலர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் வழங்காமல் தாமதப்படுத்துவதாக மதுரை காவல் துறையினர் புலம்புகின்றனர்.
மதுரை மாநகர காவல் துறையில் சுமார் 3 ஆயிரம் போலீஸார் பணிபுரிகின்றனர். தேர்தல், திருவிழா போன்ற சிறப்பு பாதுகாப்பு பணியின் போது, போலீஸாருக்கு சிறப்பு அலவன்ஸ் வழங்கப்படுவது வழக்கம். இதன்படி, மாநகர காவல்துறையினருக்கு இந்த மக்களவை தேர்தலுக்கான சிறப்பு பணி கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அலவன்ஸை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பிற மாவட்டங்கலில் இந்த அலவன்ஸ் வழங்கப்பட்டு விட்ட நிலையில், மதுரைக்கு மட்டும் இன்னும் கிடைக்கவில்லை என தேர்தல் பணியில் இருந்த போலீஸார் புலம்புகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பதால் இந்தக் தொகை கைக்குக் கிடைத்தால் குழந்தைகளுக்கு பள்ளிக் கூட செலவினங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதும் போலீஸாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது தொடர்பாக மதுரை போலீஸ் வட்டாரத்திலிருந்து நம்மிடம் பேசியவர்கள், "பொதுவாக தேர்தல் போன்ற சிறப்புப் பாதுகாப்பு பணிக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.200 வரை அலவன்ஸ் கிடைக்கும். இதன்படி, பார்த்தால் மதுரை மாநகர காவல் துறையினருக்கு மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான அலவன்ஸாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10 முதல் 15 ஆயிரம் வரையிலும் கிடைக்க வாய்ப்புள்ளது. தேர்தல் நடைமுறைகள் எல்லாம் முடிந்துவிட்ட பிறகும் இன்னும் எங்களுக்கான அலவன்ஸ் தொகை கிடைக்கவில்லை.
பள்ளிக் கூடங்கள் திறந்துவிட்டதால் இத்தொகை கிடைத்தால் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட செலவுகளுக்குப் பயன்படும். குறிப்பாக, ஆயுதப்படை போலீ ஸாருக்கு மிக உதவியாக இருக்கும். இது தொடர்பாக மதுரை காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேர்தல் பணிக்கான சிறப்பு அலவன்ஸ்களை 3 மாதத்திற்கும் சேர்த்து மொத்தமாக வழங்க டிஜிபி அலுவலகம் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் கிடைத்துவிடும்” என்றார்.