மாரிதாஸை ஆதரித்ததாக தன் மீது தொடரும் குற்றச்சாட்டுக்கு கட்டுப்பாட்டை இழந்து மேடையில் சாடியுள்ளார் சீமான்.
சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் பங்கேற்றுப் பேசினார். அப்போது கடந்த சில தினங்களாக தன் மீதான ’சங்கி’ குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் சீறினார்.
பாஜக ஆதரவு யூடூபரான மாரிதாஸ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவினை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீமான் கருத்துரிமையை ஆதரிக்கும் வகையில், மாரிதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்தார்.இதற்கு பொதுவெளியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜகவின் வெளிப்படையான ஆதரவாளராக சீமான் மாறிவிட்டார், 'சங்கி சீமான்' என்றெல்லாம் திமுக உள்ளிட்ட கட்சியினர் சீண்டினர்.
பின்னர் இதற்கு சீமான் விரிவான விளக்கம் தந்தார். நாம் தமிழர் கருத்துக்களை பரப்பும் யூட்யூபரான ’சாட்டை’ துரைமுருகன் இதே போல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார். துரைமுருகன் -மாரிதாஸ் ஆகியோர் கைதுகளை ஒரே கோட்டில் வைத்து, கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கையாக தனது ’மாரிதாஸ் ஆதரவு’ விமர்சனம் அமைந்ததாக விளக்கினார்.
ஆனபோதும் சங்கி சீமான் சீண்டல்கள் தணிந்தபாடில்லை. இந்தக் கொதிப்போடு சென்னை அம்பத்தூர் நினைவேந்தல் மேடையில் ஏறியவர் ‘யார் சங்கி?’ என்று ஆரம்பித்து கொட்டித் தீர்த்துவிட்டார். ”நாம் தமிழர் துரை முருகன் பிணையில் வெளிவருதற்கு எதிராக நீதிமன்றத்தில் மும்முரமாக வினையாற்றும் திமுக அரசு, மாரிதாஸ் மீதான வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தபோது அதற்கு மறுப்பு தெரிவிக்காதது ஏன்?. அப்படியானால் உண்மையான சங்கி யார்? யாரைப்பார்த்து யார் சங்கி என்கிறீர்கள்? சொங்கிகளா.. திமுகதான் உண்மையான சங்கி!” என்று சாடினார்.
ஒரு கட்டத்தில் கருப்பு சிவப்பு நிறத்திலான தனது காலணியை கழற்றி மேடையில் காட்டினார். “எப்படிப்பட்டதை அணிந்திருக்கிறேன் பாருங்கள். ஜனநாயகவாதியாக இருக்கும்படி என்னை பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு. என்னை வெறிகொள்ள வெச்சுடாத. சிக்கலாயிடும்” என்று அதற்குப் பின்னரும் ஒரு பாட்டம் திமுகவினரை திட்டித் தீர்த்தார்.
சங்கி சீமான் என்றழைத்து தன்னை பாஜக ஆதரவாளராக்கும் திமுகவினரின் பகடிகளில், ரொம்பவே பாதிக்கப்பட்டிருப்பது சீமானின் சீற்றத்தில் வெளிப்பட்டது. ஒரு கட்டத்தில் கோபத்தை தனக்கே உரிய நகைச்சுவைக்கு திருப்பி பேச்சை விசில், கைத்தட்டல்களுக்கு மத்தியில் முடித்தார் சீமான்.