கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்டகாலமாகவே சாலைகள் மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. நாகர்கோவிலில் ஆமைவேகத்தில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடைப் பணிகளால், சாலையில் செல்லும் வாகனங்கள் கடலில் படகில் செல்வதுபோல் செல்கின்றன. இதனிடையே அண்மையில் பெய்த பெருமழையும் குமரி மாவட்டத்தின் சாலைகளை வெகுவாக சேதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதை சீர்செய்ய தொடர்ந்து மனு கொடுத்தும், போராடியும் வரும் நாம் தமிழர் கட்சி, இப்போது வித்தியாசமான ஒரு போட்டியை கையில் எடுத்து இளைஞர்கள் மத்தியில் கவனம் குவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மோசமாக இருக்கும் சாலைகளை படம் பிடித்துக் காட்டும்வகையில் சிறந்த படைப்பாளி யார்? என காணொலி போட்டி ஒன்றை அறிவித்துள்ளது, குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி. கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகளின் அவலநிலை, அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை கைபேசி அல்லது புகைப்படக் கருவியில் 30 விநாடிகளுக்கு மிகாமல், வீடியோ வடிவில் எடுத்து அதை வாட்ஸ்அப் வழியே அனுப்பக் கோரியுள்ளது நாம் தமிழர் கட்சி.
இதில் சிறந்த காணொலி அனுப்பும் படைப்பாளிகளுக்கு சிறப்புப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசித் தேதி டிச.23 என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போதே நூற்றுக்கும் அதிகமான வீடியோக்கள் வந்து குவிந்திருப்பதாகச் சொல்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர்!
கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் 15 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்ற நாம் தமிழர் கட்சி, அதன் பின் நடந்த இடைத் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகளைப் பெற்று பிரதானக் கட்சிகளையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. இப்போது இளைஞர்களை குறிவைத்து நடத்தப்படும் இப்படியான போட்டிகள், நாம் தமிழர் கட்சியை குமரி மண்ணில் இன்னும் பலப்படுத்தும் என அக்கட்சியினர் நம்புகின்றனர்.