தமிழகத்தின் முதல் ஒமைக்ரான் பரவல் உறுதியானது


கரோனா பரவலின் அண்மைக்கால அச்சுறுத்தலாகி இருக்கும் ஒமைக்ரான் உருமாற்ற வைரஸின், தமிழக அளவிலான முதல் தொற்றாளர் இன்று(டிச.15) உறுதி செய்யப்பட்டார். இதன் மூலம் தமிழ்நாட்டுக்குள் ஒமைக்ரான் நுழைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு முன்னர் நைஜீரியாவிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த குடும்பத்தினருக்கு, விமான நிலையத்தில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அனைவருக்கும் கரோனா தொற்று உறுதியானதில், கிண்டி கிங்ஸ் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் மரபணு மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்படவே அனைவரின் மாதிரிகளும் மேல் ஆய்வுக்காக பெங்களூரு அனுப்பட்டன.

இதில், குடும்பத்தின் 47 வயது ஆணுக்கு ஒமைக்ரான் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இவர் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்ட முதல் ஒமைக்ரான் தொற்றாளர் ஆனார். இந்த நபரது குடும்பத்தினர் 6 பேர் மற்றும் இவர்களின் சக பயணி ஒருவர் என 7 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 7 பேரின் ஒமைக்ரான் பாதிப்பு குறித்த ஆய்வு முடிவுகள் இன்னமும் வந்து சேரவில்லை. இவர்கள் அனைவரும் கிங்ஸ் மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவிலிருந்து திரும்பிய இந்த 8 பயணிகளும், 2 டோஸ் கரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் என்பதும், கரோனா அல்லது ஒமைக்ரானுக்கான அறிகுறிகள் எதையும் இவர்கள் உணரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை ஒமைக்ரான் தொடர்பாக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதை வலியுறுத்துகிறது.

தமிழகம் மட்டுமன்றி தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களும் புதன் கிழமை தங்களது முதல் ஒமைக்ரான் பாதிப்பை உறுதி செய்தன.

x