அதிமுகவுடன் முற்றிலுமாக முறித்துக்கொண்ட பாமக: அடுத்தது என்ன?


மருத்துவர் ராமதாஸ்

பாமக கடந்த வந்த அரசியல் பாதையை அறிந்தவர்களுக்கு, அதிமுகவுடனான பாமகவின் கூட்டணி முறிவு பிரகடனமும், அடுத்தடுத்த உரசல்களும் ஆச்சரியம் தராது. ஆனால் அடுத்தது என்ன என்பதை தீர்மானிப்பதில், இந்த 2 கட்சிகளுக்கு அப்பால் திமுக அவசியமாகிறது.

பாமகவை மாபெரும் அரசியல் இயக்கமாக கட்டமைக்க வேண்டும், அன்புமணியை முதல்வராக்க வேண்டும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் இப்படியான பாமக நிறுவனர் ராமதாஸின் கனவுகள் பலவும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்தே அதிமுகவுடன் போதிய இடைவெளி பராமரிக்க ஆரம்பித்தது பாமக. கட்சிக்கான வாக்குகளை அறுவடை செய்யும் துருப்புச் சீட்டாக நம்பியிருந்த உள் இடஒதுக்கீட்டுக்கும் நீதிமன்ற தீர்ப்பு வேட்டு வைக்க, பாமக நிர்வாகிகள் சோர்ந்து போயுள்ளனர்.

கட்சி நிர்வாகிகள் மட்டுமன்றி அண்மைக்காலமாக ராமதாஸ் பேச்சிலும் இந்தப் பெருமூச்சு அதிகம் வெளிப்படுகிறது. அதிலும் கட்சியினர் மத்தியில் அதிகம் உரிமை எடுத்துக்கொண்டவராக அவர்களையே சாடுவதும், சலித்துக்கொள்வதுமாக மாறிப்போயிருக்கிறார் ராமதாஸ். சொந்த சமூகத்தினர்கூட பாமகவை கைகழுவி வருகிறார்களோ என்ற விரக்தியும் அவரது பேச்சில் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் முட்டிமோதி 23 சீட்டுகள் பெற்றும் 5 இடங்களில் மட்டுமே வென்றிருப்பது அவரை மேலும் சோர்வடையச் செய்திருக்கிறது. அன்புமணியை முதல்வராக்குவது என்ற தனது இறுதி இலக்கு கைப்பிடியிலிருந்து நழுவிவருவதாகக் கவலை கொண்டிருக்கிறார் ராமதாஸ்.

இந்தக் கவலை, சோர்வு, எரிச்சல், சலிப்பு எல்லாமுமாகச் சேர்ந்து, அரசியல் உறவு புளித்துப்போன அதிமுக மீது வெடித்திருக்கிறது. அப்படித்தான் சேலம் சூரமங்கலத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் மத்தியிலான கூட்டத்தில், ”அதிமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டது. பாமக வெற்றி பெறக்கூடாது என்ற வகையிலே கூட்டணி தர்மம் அதர்மமாகி விட்டது” என்று சாடியிருக்கிறார். மேலும், பாமகவினருக்கு ’பணம் முக்கியமில்லை; இனமும் மானமும்தான் முக்கியம்’ என்று ராமதாஸ் கூறியதை சமூக ஊடகவாசிகள் வைத்து செய்து வருகிறார்கள்.

ஈபிஎஸ்

பாமகவை நன்கறிந்த அதிமுக, மிகச் சாதாரணமாக ராமதாஸையும் இந்த குற்றச்சாட்டுகளையும் கடந்து செல்கிறது. இவை தொடர்பாக விளக்கமளித்த ஈபிஎஸ், ”பாமகவுக்கு கூட்டணியில் என்ன துரோகம் இழைக்கப்பட்டது என்று அவர்கள்தான் கூறவேண்டும். அவர்களுக்கு தேர்தலில் மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்” என்று சரியான இடத்தைப் பிடித்தவர், ”நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. எனவே, அவர்கள் தற்போது கூட்டணியில் இல்லை. ஒவ்வொரு தேர்தலின்போதும் பாமக கூட்டணி நிலைப்பாடு மாறுவது அவர்களது வாடிக்கை ” என நிதானமாக பதில் தந்தார்.

பாமகவைப் பொறுத்த வரையில் இனி அதிமுக கூட்டணி அவர்களுக்கு அநாவசியம். அதற்காக உடனடியாக திமுகவிடம் சரணடைந்து விடவும் முடியாது. அன்புமணியை முதல்வராக்கும் நோக்கத்துடன், திமுகவை நயந்து செல்ல ராமதாஸால் முடியாது. வாக்கரசியல் நிர்பந்தத்துக்கான தேர்தல் நேரமும் இதுவல்ல. பெரும்பான்மை மிதப்பும், ஆளுங்கட்சி அதிகாரமும் கைக்கொண்டிருக்கும் திமுகவுக்கும், பாமகவுடனான கூட்டணி தேவையில்லை. ஆனால் பாமகவைப் பொறுத்தவரை, வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான மேல்முறையீடுக்கு திமுகவின் தயவு மிகவும் தேவை. அதிலும் தாங்களின்றி திமுக அரசு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் பாமகவுக்கு ஆகக்கூடாதது. எனவே இடஒதுக்கீடு விஷயத்தில் திமுகவுடன் இணைந்தும், இதர அரசியல் நிலைப்பாடுகளில் பொறுப்பான எதிர்க்கட்சியாகவும் செயலாற்ற பாமக தயாராக இருக்கிறது.

அன்புமணி ராமதாஸ்

இதற்கிடையே கட்சியைப் புத்துருவாக்கம் செய்ய ராமதாஸ் திட்டமிட்டிருக்கிறார். அதன்பொருட்டே தனது உடல்நிலை, பெருந்தொற்று அபாயம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது, களம் காண ஆரம்பித்திருக்கிறார். ஆனால் எதை முன்வைத்து கட்சி அரசியல் செய்வது, அடிப்படையை கட்டமைப்பது என்பதில் கட்சி நிர்வாகிகளுக்கு கடும் குழப்பம். பாமக எம்எல்ஏக்கள் வெளிப்படையாக ஸ்டாலினை புகழ்ந்து வரும் சூழலில், கட்சியினர் மத்தியில் அன்புமணியை முதல்வராக்குங்கள் என்பது எடுபடாது. எனவே இனம், மானம், ரோஷம் என இறங்கி தன் சமுதாய மக்களை உசுப்பேற்றி வருகிறார் ராமதாஸ். அதுவே, அவரது பேச்சிலும் வெளிப்பட்டு வருகிறது. பாமகவின் வாக்கு வங்கியான வன்னியர்களை மீண்டும் தன்பக்கம் திருப்பும் முயற்சியைத் தொடங்கி இருக்கிறார். அதற்காக, ‘வன்னிய சொந்தங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கட்டும். அங்கிருந்தபடியே பாமகவுக்கு ஓட்டுப்போடட்டும்’ என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார். இவை எங்கே போய் முடியும், எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பதுதான் பாமகவினர் மத்தியிலான தற்போதைய பெருங்கேள்வி!

குரல்:- ம.சுசித்ரா

x