கேரள பாஜக எம்பியின் கருத்துக்கு தென்மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு


அல்போன்ஸ் கண்ணானந்தம் எம்.பி.

மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள அணைப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற கேரள பாஜக (ராஜ்ய சபா) எம்பி அல்போன்ஸ் கண்ணானந்தம், பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி, அதை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று பேசினார். அவரது அந்த பாராளுமன்ற உரை காணொலியாக சமூக வலைதளத்திலும், மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மத்தியிலும் வேகமாகப் பரவி வருகிறது.

அதில், "உணவு தானியம், காய்கறி எல்லாவற்றுக்கும் கேரளா, தமிழ்நாட்டைத்தான் சார்ந்திருக்கிறது. அங்கிருந்து ஓரிரு நாட்கள் சரக்கு வாகனங்கள் கேரளா வரவில்லை என்றால், நாங்கள் பைத்தியமாகிவிடுவோம். இப்போது முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்கு வருகிறேன். அந்த அணை கேரள மாநிலத்துக்குள் இருக்கிறது. முழு தண்ணீரையும் தமிழ்நாடுதான் பயன்படுத்துகிறது. அந்தத் தண்ணீரை விவசாயத்துக்கு மட்டுமின்றி, மின் உற்பத்திக்கும் பயன்படுத்திக்கொள்ள கேரள அரசு அனுமதி தந்திருக்கிறது. 8,000 ஏக்கர் நிலம், தண்ணீர், மின்சாரம் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம்தான் குத்தகையாகப் பெறுகிறது கேரளம். அதுகூட தேவையில்லை. கேரள முதல்வர் அதை ரத்துசெய்துவிடலாம். ஆனால், எங்களுக்கு உயிர் முக்கியம்.

ஒரு மனிதனால் 200 ஆண்டுகள் வாழ முடியுமா? முடியாது. அவனால் உருவாக்கப்பட்ட கட்டுமானங்களும் அப்படி வாழ முடியாது. அவன் கட்டிய அணை எப்படி அத்தனை காலம் நீடித்திருக்க முடியும்? முல்லை பெரியாறு அணை சுண்ணாம்பு சுருக்கியால் கட்டப்பட்டது. கான்கிரீட்டால் கட்டப்பட்டதல்ல. சுருக்கியில் உருவான அணை எப்படி 125 ஆண்டுகள் நீடித்திருக்க முடியும்? எனவே, அந்த அணை அகற்றப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த அணைப் பாதுகாப்புச் சட்டம் பேருதவியாக அமையும்" என்று பேசியிருக்கிறார் அல்போன்ஸ் கண்ணானந்தம்.

தேனி அன்வர் பாலசிங்கம்

இவரின் இந்தப் பேச்சு, முல்லை பெரியாறு விவசாயிகள் இடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கல்லணை பாதுகாப்பாக இருக்கிறது. வெறும் 125 ஆண்டுகள் ஆன பெரியாறு அணையும் பாதுகாப்பாக இருக்கிறது. இதை உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவும் உறுதி செய்துவிட்டது. அணை பலவீனமாக இருந்தால் இடிக்கலாம். ஒரு குழந்தையோ, இளைஞனோ வாழத்தகுதியில்லாத அளவுக்கு உடல் நலிவுற்று அல்லாடினால், கருணைக் கொலை செய்யக்கோரலாம். முதியவர் ஒருவர் நன்றாக ஓடி ஆடி வேலை பார்க்கிறார் என்றால், இவர் வயதானவர் என்று சொல்லி கருணைக் கொலைக்கு அனுமதி கேட்க முடியுமா? அப்படித்தான் இருக்கிறது கேரள பாஜக எம்பியின் அபத்தமான பேச்சு" என்று, பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் அன்வர் பாலசிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். கூடவே, "அந்த கண்ணானந்தம் கேரளக்காரராக இருந்தாலும் உத்தர பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபா உறுப்பினராக்கப்பட்ட பெருங்கோடீஸ்வரர். இயற்கை வளங்கள் அழிப்பையே தொழிலாகக் கொண்டவர். அவரெல்லாம் முல்லை பெரியாறு பற்றிப் பேசுவதே தவறு" என்றார் அன்வர் பாலசிங்கம்

இதுகுறித்து தேனி மாவட்ட பாஜக தலைவர் பி.சி.பாண்டியனிடம் கேட்டபோது, “எனக்கு அதுபற்றித் தெரியவில்லை. கட்சியிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்று நழுவினார்.

பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்

பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜை காமதேனு சார்பில் தொடர்புகொண்டு, கேரள பாஜக எம்பியின் கருத்து பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

"உடன்பிறந்த அண்ணன் தம்பியாக இருந்தாலும், வாயும் வயிறும் வேறுதான். அப்படித்தான் கேரள பாஜகவும், தமிழக பாஜகவும். அவர்களது கருத்தே எங்களது கருத்து கிடையாது. அங்கே அரசியல் பண்ணுவதற்காக கேரள பாஜக அப்படிப் பேசலாம். ஆனால், முல்லை பெரியாறு அணை குறித்த ஆய்வறிக்கைகளைப் படித்து, பிரசுரங்கள் வெளியிட்டவன் என்ற முறையில் சொல்கிறேன் முல்லை பெரியாறு அணை போல பாதுகாப்பான அணை, உலகத்திலேயே இல்லை. இதைச் சும்மா வாதத்துக்காகச் சொல்லவில்லை. ஏற்கெனவே அணை பலமாக இருந்தது. அடுத்து கேரளா சொன்னதற்காக அதை மேலும் பலப்படுத்துவதற்காக அந்த அணைக்குப் பக்கத்திலேயே இன்னொரு அணையையும் கட்டியிருக்கிறோம். நம் வீட்டுச் சுவரின் தடிமன் ஒன்றரை அடிதான் இருக்கும். ஆனால், இந்த அணைச் சுவற்றின் தடிமனானது 60 முதல் 100 அடி அகலத்துக்கு இருக்கிறது. எனவே, இந்த அணை பலவீனமாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னால், அது 100 சதவீதம் உள்நோக்கம் கொண்ட கருத்து. பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினால், கேரளாவைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள், பணக்காரர்கள், சினிமாக்காரர்கள் ஆக்கிரமித்து எழுப்பியுள்ள பண்ணை வீடுகள், ரிஸார்ட்கள், தோட்டங்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கிவிடும். அதனால் அவர்கள் எதிர்ப்பது இயல்பு. ஆனால், இந்த எம்பி எதற்காக அப்படிப் பேசினார் என்று தெரியவில்லை. ஒருவேளை அந்த நில மாஃபியாவுக்கு அடிமையாகிவிட்டாரா? அல்லது அரசியலுக்காக அப்படிப் பேசுகிறாரா என்று தெரியவில்லை" என்றார்.

"தவறே செய்தாலும் கேரள கம்யூனிஸ்ட்களை தமிழக கம்யூனிஸ்ட்கள் விமர்சிப்பதில்லை. நீங்கள் துணிச்சலாக விமர்சிக்கிறீர்கள். எதிர்ப்பு தெரிவிப்பதுடன் நில்லாமல், தமிழக பாஜக சார்பில் கேரள பாஜகவிடம் பேசி, இப்படியெல்லாம் அபத்தமாகப் பேசாதீர்கள். எங்கள் மாநில விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் என்று சொல்லலாமே?" என்று கேட்டோம்.

அதற்குப் பதிலளித்த நாகராஜ், "கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பது பாஜக என்றாலும்கூட, தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கோரி தமிழக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதேபோலத்தான் முல்லை பெரியாறு பிரச்சினையிலும் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அங்கே ஆள்வது பாஜக அல்ல, கம்யூனிஸ்ட். எனவே, அவர்களுடன் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் பேச முடியும். நாங்கள் எப்படிப் பேச முடியும்? அங்கே பிரதான கட்சியாக இருப்பது காங்கிரஸ். அதுதான் அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்கிறது. அவர்களிடம் பேசித் தடுக்க வேண்டியது தமிழ்நாடு காங்கிரஸ்தான். செய்ததா?" என்றார்.

"இங்குள்ள பாஜக தலைமை, கேரள பாஜக தலைமையிடம் பேச முடியாதா?" என்று நாகராஜிடம் கேட்டதற்கு, "அது எப்படி சார் பேச முடியும்? அணை பாதுகாப்பாக இல்லை என்று காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் சொல்லிச் சொல்லி மக்கள் மனதில் பதியவைத்திருக்கின்றன. அதற்கு எதிராகப் பேசுவதே தவறு என்ற அளவுக்கு மக்கள் மனதில் ஏற்றிவிட்டார்கள். எனவேதான், பாஜகவும் அங்கே அரசியலுக்காக அப்படிப் பேச வேண்டியதிருக்கிறது" என்றார்.

x