இன்னும் சில மாதங்களில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்தல் வரவிருக்கிறது. புத்தாண்டின் தொடக்கமே இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் எனப் பேசப்படும் நிலையில், நேற்றைய தினம் வாராணசியில் பிரதமர் மோடியையும் காசி விஸ்வநாதர் ஆலயத்தையும் முன்வைத்து, பிரம்மாண்ட விழாவை நடத்தி முடித்திருக்கிறார்கள். காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ரூ.900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள புனரமைப்பு பணிகளில் ஒரு பகுதி முடிவடைந்த நிலையில், நேற்றைய விழாவில் அதை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி.
தேர்தல் அறிவிப்புகள் வெளியாகிவிட்டால் இத்தகைய விழாக்களில் பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்க முடியாது என்பதாலேயே புனரமைப்புப் பணிகள் பாதி முடிந்த நிலையிலேயே, இந்த விழாவை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. விழாவில் பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த 11 முதல்வர்கள், துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்த பிறகு, இவர்களிடன் மணிக்கணக்கில் ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தினார் மோடி. கோயில் பிரசாதம் எனும் பெயரில், உபி முழுவதிலும் சுமார் 16 லட்சம் பொட்டலங்களில் இனிப்பு லட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
வாராணசி அமைந்துள்ள உபியின் கிழக்குப்பகுதி பாஜகவுக்கு மிகவும் பிரதானக் களமாக உள்ளது. இந்தப் பகுதிக்குள் 137 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 2017 தேர்தலில், இதில் 100 தொகுதிகள் பாஜகவுக்குக் கிடைத்தன. அந்த சமயத்தில் பாஜகவின் வெற்றிக்குத் தோள்கொடுத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் முக்கியக் கட்சியான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, இப்போது சமாஜ்வாதி கூட்டணிக்கு மாறிவிட்டது. இந்த நிலையில் எந்த விதத்திலும் பழைய செல்வாக்கை இழந்துவிடாமல் இருக்கவே, வாராணசி கோயில் விழாவை பாஜக அதிக முக்கியத்துவம் கொடுத்து நடத்தியதாகச் சொல்கிறார்கள்.