கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் 60.72 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மயூரா எஸ்.ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக அதன் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
போட்டி கடுமையாக இருந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் வெற்றிபெறும் சூழலும் இருந்தது. அதன்படி, வாக்கு எண்ணிக்கையின் போது கமல்ஹாசனும் மயூரா ஜெயக்குமாரும் மாறி மாறி முன்னிலை பெற்றார்கள். ஆனால், இறுதிச் சுற்றில், மயூரா பின்னுக்குத் தள்ளப்பட்டு போட்டி கமல்ஹாசனுக்கும் வானதி சீனிவாசனுக்குமாக மாறியது. இறுதியில் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கோவை தெற்கில் வெற்றிவாகை சூடினார் வானதி சீனிவாசன்.
இந்த நிலையில் கோவை தெற்கில் போட்டியிட்ட ‘ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி’ யின் வேட்பாளரான கே.ராகுல் காந்தி என்பவர், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்திருப்பதால் வானதியின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.
இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் புகாருக்கு உரிய ஆதாரம் இல்லை எனத் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது.