மதுரை: மதுரையில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் தனியார் தண்ணீர் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை சம்பக்குளத்தைச் சேர்ந்த பாண்டி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் ஒத்தக்கடை செல்லும் சாலையில் நரசிங்கம் கண்மாய் அருகிலும், நெல்லியேந்தல்பட்டி கண்மாய் அருகிலும் இரு தனியார் தண்ணீர் கம்பெனிகள் செயல்படுகின்றன. இந்த கம்பெனிகளிலிருந்து தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகள், பிரபல ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.
இப்பகுதியில் முறையாக அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் ஒத்தக்கடை பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நரசிங்கம் கண்மாய், நெல்லியேந்தல் கண்மாய் பகுதியில் தண்ணீர் கம்பெனிகள் செயல்பட தடை விதித்து, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “இரு தனியார் தண்ணீர் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீர்வளத்துறை செயற் பொறியாளர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்டு, “நீர்வளத்துறை செயற் பொறியாளர் பரிந்துரைப்படி, நிலத்தடி நீர்மட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட இரு தனியார் தண்ணீர் கம்பெனிகள் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.