கரூர்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, “கரூர் மாநகராட்சி பகுதியில் மரக்கன்று பராமரிப்பை ஏற்றுக் கொண்டால் மாணவர்கள் விரும்பும் இடத்தில் மரக்கன்று நட்டு தரப்படும்” என தெரிவித்தார்.
கோவை ஈஷா யோகா மையம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் காவேரி கூக்குரல் திட்டத்திற்காக தமிழக அளவில் நிகழாண்டு 1.21 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதில், கரூர் மாவட்டத்தில் 3.50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கரூர் வெண்ணெய்மலை கொங்கு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. கொங்கு மேல்நிலைப் பள்ளி தாளாளர் கே.பாலு குரு சுவாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கரூர் மாநகராட்சி மேயர் கவிதா பங்கேற்று மரக்கன்று நட்டு முதற்கட்ட மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.
பள்ளி வளாகத்தில் 83 மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் மாணவ, மாணவிகளுக்கு 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய மேயர் கவிதா, “கரூர் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அவர்கள் எங்கு விரும்புகிறார்களோ
அங்கு மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நட்டு தரப்படும்” என்றார்.
இந்த நிகழ்வில் கனரா வங்கி முதன்மை மேலாளர் ஆர்.பி.ஸ்ரீநாத், கரூர் ஈஷா யோகா மைய பொறுப்பாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கரூர் ஈஷா யோக மைய நிர்வாகி கே.முத்துசாமி வரவேற்றார். பள்ளி முதல்வர் சுரேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கரூர் ஈஷா யோகா மையத்தினர் செய்திருந்தனர்.