மதுரை சூர்யாநகரைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ், பாஜகவுக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தும் தொடர்ந்து பதிவிட்டுவந்தார். இந்தச் சூழலில், முப்படைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி, ‘காஷ்மீரைப் போல தமிழகத்திலும் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக பதிவிட்டதைத் தொடர்ந்து, 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்ததால், அவர் அன்றைய தினமே தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி அவர் மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கூடவே, தன் மீதான வழக்குகளில் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், விசாரணைக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மேல் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.