மார்க்சிய அறிஞரும், எழுத்தாளருமான என்.ராமகிருஷ்ணனின் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
தமிழில் 76 நூல்கள், ஆங்கிலத்தில் 10 நூல்கள், 25-க்கும் மேற்பட்ட மொழியாக்கங்கள் எனப் பல்வேறு நூல்களை எழுதிய இடதுசாரி வரலாற்றாசிரியர் என்.ராமகிருஷ்ணன் நேற்று இரவு மதுரையில் காலமானார்.
அவரது மறைவு குறித்து வெளியிட்டிருக்கும் இரங்கல் குறிப்பில், “‘தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’, An Outline History of the Communist Movement of the World போன்ற பல தலைசிறந்த இடதுசாரி இயக்க வரலாற்று நூல்களை எழுதிய தோழர் என்.ராமகிருஷ்ணன் மறைவெய்தினார் என்ற வேதனைமிகு செய்தி அறிந்து மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். ‘தோழர் என்.ஆர்’ எனப் பொதுவுடைமை இயக்கத்தினரால் அன்புடன் அழைக்கப்பெறும் இவர் அண்மையில் தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருது பெற்ற தியாகி சங்கரய்யா அவர்களின் சகோதரரும் ஆவார்.
பொதுவுடைமைக் கொள்கைகளையும் அவ்வியக்கத்தின் வரலாற்றையும் கடைக்கோடிக்கும் கொண்டுசேர்க்கும் பணியைத் தன் வாழ்நாள் கடமையாகவே மேற்கொண்ட எழுத்தாளராக விளங்கிய அவரது மறைவு மார்க்சிய அறிவுலகிற்குப் பேரிழப்பாகும்” என்று குறிப்பிட்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், என்.ராமகிருஷ்ணனை இழந்து வாடும் அவரது அவரது சகோதரர் தோழர் என். சங்கரய்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், இடதுசாரி இயக்கத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்திருக்கிறார்.