தமிழ்நாட்டில் சுற்றுப்புறச் சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் விதமாக, மாசற்ற அலுவலக வாரப் பயண நாள் கடைபிடிக்கப்படுகிறது. வாகனப் பயன்பாட்டை பெருமளவில் குறைத்துக் கொள்ளும் விதமாக, அரசு அதிகாரிகள் பலரும் தங்கள் அலுவலக வாகனங்களை ஒருநாள் தவிர்த்து, அன்றைய தினம் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
சுற்றுச்சூழல் மாசுபடுதலைத் தடுக்கும் விதமாக, நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கடந்த வாரத்தில் ஒருநாள் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு 2 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் வந்தார்.
இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்து, ஆட்சியர் அலுவலகம் வரை உள்ள சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் அலுவலகத்துக்கு நடந்து சென்றார். ஆட்சியர் நடந்து வருவதை அந்தப் பகுதியில் இருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதுபோல் திங்கள் அல்லது புதன் கிழமையில் நடந்து செல்ல இருப்பதாகவும், மற்ற அலுவலர்களும் இதைக் கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருக்கும் ஆட்சியர், பொதுமக்களும் இதைக் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இப்படி, ஆட்சியர்கள் தங்களை முன்னுதாரணமாக்கிக் கொள்வது நல்ல மாற்றத்துக்கான தொடக்கமாக இருக்கும். ஒவ்வொருவரும் இப்படி வாரத்தில் ஒருநாளாவது செயல்பட்டால், சுற்றுப்புறச் சூழல் மாசுபாட்டை குறைப்பதில் அனைவருமே பங்கெடுக்கலாம்.