உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குக: காங்கிரஸில் இருந்து கோரிக்கை!


உதயநிதி ஸ்டாலின்

‘அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற வேண்டும்’ என்ற அளவில்தான் திமுகவினரே பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால், திமுகவினரையும் மிஞ்சும் வகையில் ‘உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்க வேண்டும்’ என காங்கிரஸ் கட்சியில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

ஆர்.எஸ்.ராஜன்

காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ்.ராஜன். எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் தடாலடிக்குச் சொந்தக்காரர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ரஜினியோடு பயணித்தார். ரஜினி கட்சி தொடங்கவில்லை என அறிவித்ததும் முதல் எதிர்ப்புக் குரல் கொடுத்ததோடு, ரஜினியால் தான் வாழ்க்கையே போனது எனவும் சீறினார். மீண்டும் காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்தவருக்கு, விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இப்போது, ‘உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கவேண்டும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இவர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.ராஜன், காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, “தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பொற்கால ஆட்சி நடந்துவருகிறது. பெருந்தலைவர் காமராஜரின் கனவுப்படி அரசுப் பள்ளிகள் இன்று புத்துயிர் பெற்றிருக்கின்றன. தந்தை பெரியாரின் ஆசைப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆசைப்பட்ட சமத்துவ சமூகம் மலர தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் ஓய்வே அறியாது உழைத்து வருகிறார்.

முதல்வரின் மகன் என எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் சேப்பாக்கம் தொகுதி மக்களில் ஒருவராக கரோனா, சென்னை பெருமழை நேரங்களில் களத்தில் முதல் ஆளாக நின்று உழைத்தார் உதயநிதி ஸ்டாலின். அவரது உழைப்பு தமிழகம் முழுவதிலும் நடந்து வருகிறது. அவர் பிறக்கும் காலம்தொட்டே அரசியல் நெடியுள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர். அதனால்தான் மண்ணின் மகத்துவமும், மக்களின் மன ஓட்டமும் உதயநிதிக்கு தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகிறது. தேர்தல் நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் சூறாவளி பிரச்சாரமும் செய்திருந்தார். மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் பாஜகவின் அடிக்கல் அரசியலை கடைக்கோடி தமிழனுக்கும் தெரிய அவரது பிரச்சாரமே கொண்டு சேர்த்தது. தமிழகம் இப்போது அண்ணாவின் கனவுகளை சுமந்துகொண்டு, இந்தியாவுக்கே முன்னுதாரண மாநிலமாக முன்னேறி வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகர மேயர், அமைச்சர், துணை முதல்வர் என பல்வேறு படிநிலைகளை கடந்து இந்த பொறுப்புக்கு வந்திருந்திருக்கிறார். தன் இல்லத்திலேயே கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என இருவரையும் பார்த்தே வளர்ந்ததால், இருவரது ஆற்றலையும் இந்த இளம் வயதிலேயே ஆழமாக உள்வாங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் ஆழ்ந்த அரசியல் அறிவு, மக்களோடு அவருக்கு இருக்கும் நெருக்கம், கட்சியினரோடு இருக்கும் பிடிப்பு இதையெல்லாம் மதிப்பீடு செய்து துணை முதல்வர் பதவியை வழங்கவேண்டும்.

இளம்தலைமுறையினர் மத்தியில் மதவாத சிந்தனைகளை வெறுத்து, சமத்துவ சிந்தனையை வளர்க்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அதற்கு எல்லா மக்களும் விரும்பும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவிகொடுப்பதே பொருத்தமானதாக இருக்கும்” என்றார்.

இந்தக் கோரிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் ஆர்.எஸ்.ராஜன்.

x