ராகுல் காந்தியைப் பாராட்டிய இந்து இயக்கம்!


ராகுல் காந்தி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உயர்மதிப்புடைய பணத்தாள் நீக்கம் என பலப் பிரச்சினைகள் இருந்தாலும் பாஜக தொடர்ந்து வெற்றிக்களிப்பிலேயே இருக்கிறது. அதற்கு பாஜக முன்வைக்கும் இந்துத்துவ அரசியலே பிரதான காரணமாக இருக்கிறது. இதை ஆழமாக உள்வாங்கியதால் தான், கட்சியின் மாநாட்டில் ’நான் ஒரு இந்து’ என பேசும் சூழலுக்குள் தள்ளப்பட்டார் ராகுல் காந்தி. ஆனால், அதற்கு கைமேல் பலனாக அகில பாரத இந்து மகா சபா என்னும் இந்து இயக்கமானது, ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான், ஜெய்பூரில் பணவீக்கத்துக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய ராகுல் காந்தி, ‘நான் இந்து. ஆனால் இந்துத்துவா அல்ல. இந்துவுக்கும், இந்துத்துவத்துக்கும் உள்ள வேறுபாடு என்பது காந்திக்கும், கோட்சேவுக்கும் உள்ள வேறுபாடு’ எனப் பேசியிருந்தார். அதேநேரம், ராகுல் காந்தி தன்னை ‘இந்து’ என அடையாளப்படுத்திப் பேசியதை இந்து இயக்கங்கள் வரவேற்கத் தொடங்கியுள்ளன.

அகில பாரத இந்து மகா சபாவின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், ‘நான் இந்து. இது இந்துக்களின் நாடு என சொன்ன ராகுல் காந்திக்கு பாராட்டுகள்’ என அறிக்கையே வெளியிட்டுள்ளார். ராகுல் தன்னைப் பொதுவெளியில் இந்து என ஏற்றுக்கொண்டதையும், அப்படிப் பேசத் தொடங்கியதையும் ஆரோக்கியமான மாற்றம் எனவும் இந்த அமைப்பு முன்வைக்கிறது. தீவிர இந்துத்துவ அமைப்பான அகில பாரத இந்து மகா சபாவுக்கு பாஜகவோடு நீண்டகாலமாக கருத்து முரண்பாடு இருந்துவருகிறது.

அயோத்தி பிரச்சினையில் அகில பாரத இந்து மகாசபாவே வழக்குத் தொடுத்திருந்தது. ஆனால், தீர்ப்பின் வெற்றியை பாஜக மட்டுமே பயன்படுத்திக்கொண்டதாக அக்கட்சியோடு பிணக்கு இருந்துவந்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலையும் அகில பாரத இந்து மகா சபா தனித்தே சந்தித்தது. தீவிர இந்துத்துவத் தளத்தில் இயங்கும் அகில பாரத இந்து மகா சபா, கன்னியாகுமரி மாவட்டத்தில் வலுவாக இருக்கிறது. இந்த அமைப்பு ராகுல் காந்திக்கு பாராட்டுத் தெரிவித்திருப்பது, கன்னியாகுமரி மாவட்ட இந்து இயக்கத்தினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

x