கரோனா 3-வது அலை தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாக, கரோனா தடுப்பூசி 2 டோஸ்களும் போட்டவர்கள் மட்டுமே, இனி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று நேற்று (டிச.11) கோயில் நிர்வாகம் அறிவித்தது. மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், கோயிலுக்குள் நுழைவோர் எந்தக் கோபுர வாசல் வழியாக உள்ளே வந்தாலும் நுழைவாயிலிலேயே தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றைக் காட்ட வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இன்று(டிச.12) அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றிருக்கிறார் கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டவர்கள் மட்டுமே 13.12.2021 முதல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு, நிர்வாகக் காரணங்களுக்காகத் திரும்பப் பெறப்படுகிறது. பக்தர்கள் வழக்கம்போல சாமி தரிசனம் செய்யலாம். தடுப்பூசிச் சான்று கட்டாயமில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.
அய்யப்ப சுவாமி சீசன் என்பதால், சபரிமலை செல்லும் பக்தர்கள் எல்லாம் ஆன்மிகச் சுற்றுலாவாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் வந்துபோகிறார்கள். கடந்த ஒரு வாரமாக மீனாட்சியம்மன் கோயிலில் கூட்டம் அதிகமிருந்த நிலையில், தடுப்பூசி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மறுநாளே அது திரும்பப் பெறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.