வாக்குகளை பிரிக்கும் ஆம் ஆத்மி: பலனடையும் பாஜக!


உத்தராகண்ட் மாநிலத்தில், மீண்டும் பாஜக கட்சி ஆட்சியை பிடிக்கும் என அண்மையில் வெளியான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகளை ஆம் ஆத்மி பிரிப்பதன் காரணமாக, பாஜக வெல்வதற்கான வாய்ப்புகள் கூடுவதாக, கருத்துக் கணிப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தராகண்ட் மாநிலத்தில், முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது. உத்தர பிரதேசத்தின் வாக்காளர் மனநிலையே உத்தராகண்டிலும் பிரதிபலிக்கும் என்பதால், உத்தர பிரதேசத்துக்கு இணையாக உத்தராகண்ட் தேர்தல் முடிவுகளும் அதிக எதிர்பார்ப்புகளுக்கு உரியவையாக உள்ளன.

’ஏபிபி நியூஸ் -சி ஓட்டர்’ சார்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில், பாஜக மீண்டும் ஆட்சியமைக்கவே வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. இந்த கருத்து கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் 39.8 சதவீத வாக்குகளுடன் பாஜக முன்னிலை பெறுகிறது. அடுத்த இடத்தில் 35.7 சதவீத ஆதரவுடன் காங்கிரசும், புதிதாகக் களமிறங்கும் ஆம் ஆத்மி கட்சி 12.6 சதவீத ஓட்டுகளையும் பெறும் என்றும் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்த கருத்து கணிப்புகளின் முடிவு, தேர்தல் நெருக்கத்தில் 3 முதல் 5 சதவீதம் கூடவோ குறையவோ செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பாஜக, காங். இடையிலான வித்தியாசம் குறையவும் வாய்ப்புள்ளது. மேலும் ஆளும்கட்சிக்கு எதிரான ஓட்டுகளை, மாநிலத்தில் புதிதாக களமிறங்கும் ஆம் ஆத்மி கட்சி கணிசமாக குறைப்பதையும் கருத்து கணிப்பின் முடிவுகள் வெட்டவெளிச்சமாக்குகின்றன. இந்த வகையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பின், அதற்கு ஆம் ஆத்மியின் உத்தராகண்ட் பிரவேசம் மறைமுகமாக உதவ இருக்கும்.

டெல்லிக்கு அப்பாலும் கட்சியை விரிவுபடுத்தும் நோக்கில், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக களமிறங்கி உள்ளது. இங்கெல்லாம் ஆஆக வருகை, பாஜகவுக்கே சாதகமாகவே அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதை உத்தராகண்ட் மாநில கருத்து கணிப்பு உறுதி செய்துள்ளது.

காங்கிரஸ் ஓட்டுகளை பிரித்து பாஜகவுக்கு ஆதாயம் சேர்க்கும் கட்சிகளில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மியும் சேர்ந்துள்ளதை உத்தராகண்ட் நிலவரம் வெளிப்படுத்தி உள்ளது.

x