போராட்டம் முடியவில்லை; அரசுக்கு அவகாசம் கொடுத்திருக்கிறோம்!


விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து ஆழமாகவும், ஆக்கபூர்வமாகவும் பேசுபவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம். டெல்லி விவசாயிகள் போராட்டம், தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காதது, முல்லை பெரியாறு பிரச்சினை போன்றவை பேசுபொருளாக உள்ள சூழலில், அவரிடம் 'காமதேனு' இதழுக்காகப் பேசினோம்.

விவசாயிகள் போராட்டத்தின் வெற்றிக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியாவில் இதுவரையில் இப்படியொரு நீண்டகால விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதில்லை. அதுவும் 500 விவசாய சங்கங்களை ஒன்று சேர்த்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி என்ற அமைப்பாக ஒருங்கிணைத்து ஒற்றுமையுடன் போராடியதுதான் இந்த வெற்றிக்கு அடிப்படையான காரணம். இத்தனைக்கும் காவல் துறையின் அடக்குமுறைகள், காலிஸ்தான் தீவிரவாதிகள், போராட்ட ஜீவிகள், அர்பன் நக்சல்கள், சீன ஏஜென்டுகள் போன்ற அவதூறு பிரச்சாரங்கள் எல்லாவற்றையும் அமைதியாகக் கடந்து, இடையில் வரும் இடைஞ்சல்களைவிட வேளாண் சட்டம் ரத்து என்கிற ஒற்றை இலக்கில் உறுதியாக இருந்ததும் வெற்றிக்குக் காரணம்.

குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் வரையில் போராடுவோம் என்று விவசாயிகள் சொன்னார்களே?

இந்தியாவில் ஏற்கெனவே 4 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள். விலை பொருட்களுக்கு லாபகரமான விலை இல்லாததும், கடன் தொல்லையும்தான் இதற்குக் காரணம். விவசாயம் லாபகரமான தொழிலாக வேண்டுமென்றால், குறைந்தபட்ச ஆதார விலையைச் சட்டபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும். வெறுமனே 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது. எனவேதான், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்டமியற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம்.

இதற்கென அரசு தரப்பில் ஒரு கமிட்டி போடுவதாகவும், அதில் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள் என்றும், ஒரு மாத காலத்துக்குள் அந்தக் கமிட்டி அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கும் என்றும் அரசாங்கமும், விவசாயிகளும் சேர்ந்து முடிவெடுத்திருக்கிறோம். இதற்கெல்லாம் ஜனவரி 15-ம் தேதிவரையில்தான் காலக்கெடு. அதற்குள் கு.ஆ.வி. நிர்ணயச் சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்டப் போராட்டம் நிச்சயம். இன்னொரு போராட்டத்தை நடத்தும் வாய்ப்பை ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு வழங்காது என்றே நானும் நம்புகிறேன்.

பெ.சண்முகம்

அணைப் பாதுகாப்புச் சட்ட விவகாரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிலைப்பாடு என்ன?

நதி நீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சினைகள் வரும்போது, அண்டை மாநிலங்களுடன் இருக்கிற அரசியல் நல்லுறவுகளைப் பயன்படுத்தி சுமூகமாக அதைத் தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஒட்டுமொத்த அணைகளையும் ஒன்றிய அரசே எடுத்துக்கொள்ளும்போது, மாநில உரிமை பாதிக்கப்படுவதுடன், ஒன்றிய அரசானது இந்தப் பிரச்சினையில் அரசியல் சார்புத்தன்மையுடன் நடந்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்திவிடும்.

பாஜக என்றில்லை, நாளை காங்கிரஸே ஆட்சிக்கு வந்தாலும் அதுதான் நடக்கும். ஏற்கெனவே பல்வேறு அரசுத் துறைகளை தனியாருக்குத் தாரை வார்த்திருக்கிற மோடி அரசாங்கம், ஒரு நதியையே தனியாரிடம் ஒப்படைத்திருக்கிறது. அதேபோல அணைகளையும் அம்பானி, அதானி மாதிரி ஆட்களிடம் ஒப்படைத்து நிர்வகிக்கச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒவ்வொரு முறையும் தண்ணீருக்காக விவசாயிகள் தனியார் முதலாளிகளிடம் கையேந்தி நிற்கும் நிலைவந்தால், அது நாட்டின் வேளாண் உற்பத்தியிலும், பொருளாதாரத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, வேளாண் சட்டத்தைப்போலவே இந்தச் சட்டத்தையும் திரும்பப்பெற வேண்டும் என்பதே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிலைப்பாடு.

மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சி செய்யத் துடிக்கும் பாஜக, பெரும்பான்மையாக இருக்கிற விவசாயிகளைப் பகைத்துக்கொள்ள நினைக்குமா? பிறகெப்படி அவர்கள் விவசாயம் தொடர்பாக நிறைவேற்றுகிற சட்டம் எல்லாமே விவசாயத்துக்கு எதிரானவை என்று சொல்கிறீர்கள்? ஒரு நல்ல அம்சம் கூடவா அதில் இல்லை?

இல்லவே இல்லை. இந்த 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாகப் படித்து அதுபற்றி பல கட்டுரைகள் எழுதியவன் நான். அதில் எதாவது ஒரு ஷரத்தாவது விவசாயிகளுக்குச் சாதகமானது என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “விவசாயம் செய்யும் முன்பே நாம் உற்பத்தி செய்யப்போகும் பொருளுக்கு என்ன விலை கிடைக்கும் என்று முன்கூட்டியே தீர்மானிக்கிற ஒரு ஷரத்து இருக்கிறது. அது ரொம்ப நல்ல சட்டம்தானே” என்று கேட்டார். சரிதான். ஆனால், அதன் பின்னால் இருக்கிற நிபந்தனைகளைப் பற்றியும் சொல்ல வேண்டுமல்லவா? அந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், அந்த விலையும் கிடைக்காது, நிபந்தனையை மீறிய காரணத்துக்காக விவசாயிக்கு தண்டம் விதிக்கலாம், கைது செய்யலாம் என்றெல்லாம் சட்டத்தில் இருக்கிறது.

ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் என்று முன்கூட்டியே தீர்மானித்து விவசாயம் செய்தால், சந்தையில் 30 ரூபாயாக விலை குறைந்தாலும் விவசாயிக்கு 40 ரூபாய் கிடைக்கும் என்பதுபோன்ற உதாரணத்தையும் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. ஒருவேளை, இன்று போல தக்காளி விலை 150 ரூபாயாக உயர்ந்தாலும், ஒப்பந்தப்படி அந்த 40 ரூபாயைத்தான் கார்ப்பரேட்டுகள் தருவார்கள் என்பதையும் பழனிசாமி சொல்லாமல் விட்டுவிட்டார்.

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு பிரச்சினையில், மார்க்சிஸ்ட்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் வாய்மூடி மவுனியாக இருப்பதாக 5 மாவட்ட விவசாயிகள் மத்தியில் அதிருப்தி இருக்கிறதே?

முல்லை பெரியாறு பிரச்சினையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று 2014-ம் ஆண்டில் இருந்தே நாங்கள் வலியுறுத்திவருகிறோம். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்காலத்தில்தான். அதுவும் தொடர்ந்து 4 முறை 142 அடிக்குத் தண்ணீர் தேக்கப்பட்டிருக்கிறது. தண்ணீர்வந்தும் நீர்மட்டத்தை உயர்த்தவில்லை என்று சமீபத்தில் கிளப்பப்பட்ட பிரச்சினையில்கூட, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படிதான் கேரள அரசு நடந்துகொண்டதே தவிர, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவர்கள் செயல்பட்டதாகச் சொல்ல முடியாது.

கேரள கம்யூனிஸ்ட் அரசு தமிழக நலனுக்கு விரோதமாக நடந்துகொண்டது என்று சொல்வதெல்லாம், அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்படுகிற பிரச்சாரம்தானே ஒழிய, நியாயமான விமர்சனமில்லை. இதுதொடர்பாக தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் 2 விரிவான அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார். முதலமைச்சரும் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஒரு வாதத்துக்காக, கம்யூனிஸ்ட் கட்சி அது ஆள்கிற மாநிலத்துக்குச் சாதகமாக நடந்துகொள்கிறது என்று வைத்துக்கொண்டாலும்கூட, தமிழக முதல்வரும், அமைச்சரும்கூடவா தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக நடந்துகொள்வார்கள்? இப்போதும் சொல்கிறேன், அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதுதான் எங்கள் நிலைப்பாடு.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தானே, பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள தலைமை வனப் பாதுகாவலர் அனுமதியளித்தார். அதை பினராயி விஜயன் அரசாங்கம் ரத்து செய்திருப்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறியதாகாதா?

மரம் வெட்டும் விவகாரத்தைப் பிரச்சினையாக்கிய கேரள வனத் துறை அமைச்சர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல, கூட்டணி கட்சியைச் (சிபிஐ) சேர்ந்தவர். தனக்கே தெரியாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இருமாநிலங்களுக்கிடையே இந்தப் பிரச்சினை கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும்போது, முதல்வர், வனத் துறை அமைச்சரின் கவனத்துக்கே கொண்டுவராமல், அதிகாரிகள் மட்டத்திலேயே தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுதான் பிரச்சினையாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், மரம் வெட்ட அனுமதித்ததற்கு நன்றி என்று நம்முடைய முதலமைச்சர் ட்வீட் போட்ட பிறகுதான், கேரள முதலமைச்சருக்கே விஷயம் தெரிந்திருக்கிறது. நிர்வாகக் குளறுபடியால்தான் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறதே தவிர, மீண்டும் முறைப்படி அனுமதி கொடுப்பார்கள் என்றே நான் நம்புகிறேன்.

தமிழக உரிமை பாதிக்கப்பட்டபோது, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் நம்முடைய அரசாங்கம் சார்பில் கேரள அரசிடம் பேசி சுமூகத்தீர்வு கண்ட வரலாறு உண்டு. இப்போது அந்த மாதிரியான முயற்சிகளை கம்யூனிஸ்ட் தலைவர்கள் எடுத்தால் என்ன?

முல்லை பெரியாறு மட்டுமல்ல நிறைய நதி நீர் பிரச்சினைகள் இரு மாநிலங்களுக்கும் இடையே இருக்கிறது. இந்தப் பிரச்சினைகள் குறித்து தமிழக மார்க்சிஸ்ட் நிர்வாகிகளும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் கேரளா சென்று நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியை நிச்சயம் நாங்கள் முன்னெடுப்போம். இருமாநில மக்களின் நல்லவுறவு பாதிக்கப்படக்கூடாது என்கிற அக்கறையில் கேரள அரசும் அதற்கு ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம்.

பெ.சண்முகம்

கட்டாயக் கல்விச் சட்டம் போல, அனைத்து மக்களுக்கும் கட்டாய உணவு உரிமைச் சட்டம் என்கிற கோரிக்கையை சிபிஎம் முன்னெடுத்ததே, அந்தக் கோரிக்கை என்ன நிலையில் இருக்கிறது?

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்கூட இந்தக் கோரிக்கையின் ஒரு பகுதிதான். அந்தச் சட்டங்கள் மட்டும் நடைமுறைக்கு வந்திருந்தால், இந்தியாவில் பெருமளவில் பட்டினிச்சாவுகள் நடந்திருக்கும். ஏனென்றால், உணவு தானியங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைப்பதற்கான உரிமையை சேமித்து வைப்பதற்கான உரிமை என்ற பெயரில் அந்தச் சட்டம் வழங்குகிறது. உயிர் வாழ்கிற ஒவ்வொருவருக்கும் உணவு அத்தியாவசியம் என்பதால், கட்டாய உணவு உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தே ஆக வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு.

தமிழ்நாட்டில் அதீத மழை பெய்திருக்கிறதே, விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

வரலாற்றிலேயே இல்லாத அபரிமிதமான மழை, குறுகிய காலத்தில் பெய்ததால் பயிர்கள் எல்லாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் நஞ்சைப் பயிர் எல்லாம் அழிந்துவிட்டது. அதற்கான நிவாரணமாக எந்தவிதமான அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிடாததால், மிகுந்த வருத்தத்துடனும் அதிருப்தியுடனும் விவசாயிகள் இருக்கிறார்கள். இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார். 1.அறுவடைக்குத் தயாராக இருந்த கார் கால சாகுபடி நெற்பயிர் அழிந்திருந்தால் அதற்கு எக்டேருக்கு 20 ஆயிரம் நிவாரணம், 2.பயிர் அழிந்து மறு நடவு செய்வதாக இருந்தால் அத்தகைய விவசாயிகளுக்கு எக்டேருக்கு 6,032 ரூபாயானது நெல், உரம் போன்ற இடுபொருட்களாக வழங்கப்படும்.

ஆனால், அப்படி அழிந்த இடத்தில் மீண்டும் நெல் சாகுபடி செய்யவே முடியாது. காரணம், டெல்டா பாசனத்துக்கான மேட்டூர் அணையை ஜனவரி 28-ம் தேதியே மூடிவிடுவார்கள். டிசம்பர் 1-ம் தேதி விவசாயிகள் மறுநடவு செய்தாலும்கூட, கடைசி நேரத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர் கருகிப்போய்விடும். முதல்வரின் இந்த அறிவிப்பு தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட நிவாரணம் கிடைக்காத நிலையைத்தான் உருவாக்கியிருக்கிறது. எனவே, இந்த அறிவிப்பை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எங்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

x