மதுரை சூர்யா நகரில் வசித்துவந்த யூடியூபர் மாரிதாஸ், தொடர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சித்துவந்தவர். அக்கட்சிகளின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் உள்நோக்கத்துடன் அவர் பதிவிட்டுவந்ததாக புகார் இருந்தது. இந்தச் சூழலில் கடந்த 9-ம் தேதி முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தை வைத்து, தமிழ்நாட்டையும் காஷ்மீரையும் ஒப்பிட்டு ஒரு ட்வீட் பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவரை மதுரை புதூர் போலீஸார் கைது செய்தனர். பிறகு, தேனி மாவட்டம் உத்தமபாளையம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த வழக்குகளில் அவர் ஜாமீன்பெற முயற்சி எடுத்துக்கொண்டிருந்த நிலையில், மற்றொரு வழக்கில் அவரை கைது செய்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு பிரபல ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தொடர் வீடியோ பதிவிட்டுவந்த அவர், நியூஸ் 18 சார்பில் அதன் மூத்த ஆசிரியர் வினய் சரவாகி அனுப்பியதாக மெயில் ஒன்றை தனது ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூபில் வீடியோவாக 10.07.2020 அன்று காட்டினார். நியூஸ்18 தமிழ்நாடு நிர்வாகத்தின் மீது தான் கூறிய புகார்களை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும், அது தனக்குக் கிடைத்த வெற்றி என்றும் அதில் கூறியிருந்தார்.
தான் அப்படியொரு மின்னஞ்சலை மாரிதாஸ் என்பவருக்கு அனுப்பவில்லை என்றும், மோசடியாக மெயில் ஒன்றை அந்த நபர் வெளியிட்டிருப்பதாகவும் பத்திரிகையாளர் வினய் சரவாகி சென்னை மாநகர குற்றப்பிரிவில் அப்போதே புகார் செய்திருந்தார். நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடனும், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் செயல்பட்டு வரும் மாரிதாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் வினய் சரவாகி வலியுறுத்தியிருந்தார். புகாரை விசாரித்த சென்னை மாநகர காவல் துறை, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது.
அப்போது அதிமுக ஆட்சி என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது அவராகவே வழக்கில் சிக்கியிருப்பதால், பழைய வழக்கைத் தூசு தட்டி எடுத்த போலீஸார், அந்த மோசடி வழக்கிலும் அவரைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்தத் தகவலை சிறையில் உள்ள அவருக்கும், மதுரையில் உள்ள அவரது சகோதரர் மகேஷுக்கும் சென்னை சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் எஸ்.ஏ.வீராசாமி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
மெயில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாரிதாஸ், உத்தமபாளையம் கிளைச் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு விரைவில் ஆஜர்படுத்தப்படுவார். மாரிதாஸால் பாதிக்கப்பட்ட மற்றவர்களும் அவர் மீது புகார் கொடுக்க ஆவலாக இருப்பதால், கிஷோர் கே. சுவாமி போலவே மாரிதாஸ் மீதும் குண்டர் சட்டம் பாயக்கூடும் என்று தெரிகிறது.