குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்ட நஞ்சப்பசத்திரம் பகுதியில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி குன்னூர் பகுதி மக்கள் கையேழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் டிசம்பர் 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விபத்து நடந்த பகுதியில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என குன்னூர் பகுதி மக்கள் கையேழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்து வரும் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத் காமதேனுவிடம் பேசுகையில், “வெலிங்டன் ராணுவ முகாம் மிகவும் பழமையானது மற்றும் பாரம்பரியமானது. இங்குள்ள ராணுவ மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக் ஷா உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது நினைவாக வெலிங்டன் ராணுவ முகாமுக்கு செல்லும் பகுதி மானெக் ஷா பாலம் என பெயிரிடப்பட்டு, முகப்பில் அவருக்கு 5 அடி உயர சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் ராணுவ மருத்துவமனையின் நுழைவுப் பகுதியில் கிறிஸ்டல் கற்களால் அவரது உருவப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல கடந்த 1982-ம் ஆண்டு ராணுவ மையம் அருகேயுள்ள கம்பிசோலை பகுதியில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. அதன் நினைவாக போர் நினைவுச் சின்னம் பகுதியில், விபத்துக்குள்ளான விமானத்தின் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்போது ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி, அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்த நஞ்சப்பசத்திரம் பகுதியில் நினைவுச் சின்னம் முப்படைத் தளபதி பிபின் ராவத் பெயரில் அமைக்கப்பட வேண்டும்.
விபத்து நடந்த பகுதிக்கு அருகில் காட்டேரி பூங்கா மற்றும் ரன்னிமேடு ரயில்நிலையம் உள்ளன. இவற்றிக்கு, விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் பெயர்களைச் சூட்ட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களிடம் கையேழுத்து பெற்று, பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்கு அனுப்பவுள்ளோம்” என்றார்.